2026 மே 04, திங்கட்கிழமை

உள்ளூராட்சி தீர்மானங்கள் வரியிறுப்பாளர்களை பாதிக்கக் கூடாது: என்.றம்ழான்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

உள்ளூராட்சி சபையில் நிறைவேற்றப்படும் எந்தவொரு தீர்மானமும் வரியிறுப்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத   வகையில் அமைய வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்  என்.றம்ழான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாடு அறுப்பதற்கு தடைவிதிக்கப்படும் தீர்மானத்தினை கண்டி மாநகர சபை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

பெரும்பான்மையின் அடிப்படையில் இத்தீர்மானம் சபையில் எடுக்கப்பட்டிருந்தாலும் உணவுக்காக மாட்டு இறைச்சியினை பயன்படுத்துவோர் பாதிக்கப்படுவர். இது அவர்களின் உரிமையை மீறுகின்ற செயற்பாடாகும். வரி செலுத்தும் வரியிறுப்பாளர்களின் நலனையும் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்ளூராட்சி மன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படல் வேண்டும். நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஒரு சமூகம் நேரடியாக பாதிக்கப்படும் வகையில் அமையக்கூடாது.   

கண்டி மாநகர சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தனிநபருக்கு எதிரானதல்ல. ஒரு சமூகத்திற்கு எதிரானதாகும். முஸ்லிம்களுக்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் கண்டி மாநகர சபை தற்போது நிறைவேற்றிருப்பதன் பின்னணியில் பேரினவாத சக்திகளின் சதித்திட்டம் மறைந்திருக்கலாம் என நான் சந்தேகிக்கின்றேன்.

குறித்த தீர்மானத்தின் மூலம் ஒரு சமூகத்தின் உரிமை திட்டமிட்ட வகையில் பறிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைகளின் கட்டளைச்சட்டங்கள் மக்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. அதனை ஒரு பெரும்பான்மை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியிருப்பது அநீதியாகும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .