2026 மே 04, திங்கட்கிழமை

இன உறவுக்காக எடுத்த தீர்மானத்தை சிலர் விமர்சிக்கின்றனர்: காத்தான்குடி பள்ளிவாசல்

Kogilavani   / 2013 மார்ச் 19 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

'சிங்கள-முஸ்லிம் இன உறவையும் சகவாழ்வையும் கருத்திற் கொண்டும் மேற்கொண்ட விட்டுக்கொடுப்பின் அடிப்படையிலான தீர்மானத்தினை இன்று சிலர் விமர்சிக்கின்றனர்' என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை நோக்கி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் இந்தநாட்டு முஸ்லிம்களின் தலைமைத்துவக் கட்டமைப்பை சீர்குலைப்பதை அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 'இலங்கை முஸ்லிம்கள் மிகவும் இக்கட்டானதொரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இத் தருணத்தில் முஸ்லிம் சமூகத்தின் மார்க்க தலைமைத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கவும் சின்னாபின்னப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எம்மைக் கவலையடையச் செய்துள்ளன.

பௌத்த தீவிரப் போக்குடைய சக்திகளால் அண்மைக்காலமாக இஸ்லாத்தைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் பிரசாரங்களும் குறிப்பாக ஹலால் சான்றிதழுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்றவையாகும்.

இந்நிலையில் குறித்த விஷம பிரசாரங்களிலிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கும் வகையில் இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த அங்கீகாரத்தைப் பெற்ற தலைமைத்துவமான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மேற்கொண்ட சளைக்காத முயற்சிகள் இந்த இடத்தில் மெச்சத்தக்கனவாகும்.

ஹலால் சான்றிதழை இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கவேண்டும் என பௌத்த தீவிரப் போக்காளர்கள் கங்கணம் கட்டிச் செயற்பட்டபோதிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இதுவிடயத்தில் நாட்டு நலனையும் வரலாறு நெடுகிலும் பேணப்பட்டுவரும் சிங்கள-முஸ்லிம் இன உறவையும் சகவாழ்வையும் கருத்திற் கொண்டும் மேற்கொண்ட விட்டுக்கொடுப்பின் அடிப்படையிலான தீர்மானத்தினை இன்று சிலர் விமர்சிக்கத் தொடங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஓர் ஆரோக்கியமான சமூகத்தின் இருப்புக்கு விமர்சனங்கள் அவசியம் என்கின்ற போதிலும் இதுவிடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை நோக்கி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் இந்தநாட்டு முஸ்லிம்களின் தலைமைத்துவக் கட்டமைப்பை சீர்குலைப்பதை அடிப்படையாகக் கொண்டவை என்றே சம்மேளனம் கருதுகிறது.

இலங்கை முஸ்லிம்கள் காலாகாலமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை அங்கீகரிக்கப்பட்ட சிவில் சமூக, சமய தலைமைத்துவக் கட்டமைப்பாக ஏற்றுக் கொண்டுள்ளதுடன் அதன் வழிகாட்டல்களுக்கு இணங்கவே செயற்பட்டும் வருகின்றனர்.

1924 ஆம் ஆண்டுஆரம்பிக்கப்பட்டஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவானது இன்றுவரை இலங்கை முஸ்லிம்கள் சவால்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் தன்னால் இயன்ற வழிகாட்டல்களையும் தலைமைத்துவத்தையும் வழங்கி வந்துள்ளது என்பதை எவராலும் மறுக்கமுடியாது.

குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக வெளிச் சக்திகளால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டபோதும் முஸ்லிம்களுக்குள்ளேயே கருத்துவேறுபாடுகளும் வன்முறைகளும் தலையெடுத்தபோதும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நடுநிலைமையாக செயற்பட்டு சுமுகநிலையை தோற்றுவிக்க மேற்கொண்ட அர்ப்பணிப்புடனான முயற்சிகள் பாராட்டத்தக்கவையாகும்.

காத்தான்குடி, பேருவளை, வெலிகம உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மார்க்க விவகாரங்கள் தொடர்பில் ஏற்பட்ட முறுகல் நிலைக்கு தீர்வுகாணும் வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மேற்கொண்ட சமரச முயற்சிகளே இன்றுவரை அப்பகுதி மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் தமது அன்றாடகடமைகளை மேற்கொள்ள வழிசமைத்துள்ளது என்பதைநாம் இந்த இடத்தில் நினைவுபடுத்திப் பார்ப்பதுபொருத்தமானதாகும்.

இஸ்லாமிய அமைப்புகளிடையே கருத்துமுரண்பாடுகள்  தோற்றம்பெறும்போது அவற்றைக் களைந்து வேற்றுமையிலும் ஒற்றுமைகாணும் நோக்கில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 'ஒருங்கிணைப்புக்கும் ஒத்துழைப்புக்குமான கவுன்சில்' னும் அமைப்பை தோற்றுவித்து சிறப்பாக செயற்படுத்தி வருகிறது.

இவ்வாறான பின்னணியில் இலங்கை முஸ்லிம்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கும் அகில இலங்கை  ஜம்இய்யதுல் உலமா தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்திகளையும் கருத்து வேறுபாடுகளையும் தோற்றுவித்து அதில் குளிர்காயமுனையும் சக்திகள் தொடர்பில் முஸ்லிம்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் வேண்டுகோள் விடுக்கவிரும்புகிறது.

இந்தநாட்டில் முன்னெப்போதுமில்லாதவாறு முஸ்லிம் சமூகம் மிகப் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அந்த சவாலை எதிர்கொள்ளவேண்டுமாயின் நாம் அனைவரும் ஒரே தலைமைத்துவத்தின் கீழ் ஒற்றுமைப்பட்டுச் செயற்படுவதே புத்திசாதுரியமானதாகும்.

அந்தவகையில் நாட்டின் ஒற்றுமையையும் சமாதான சகவாழ்வையும் கருத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாஎடுத்துள்ள இத் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு செயற்படுமாறு சகல முஸ்லிம்களுக்கும் வேண்டுகோள் விடுப்பதோடு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தனது அர்பணிப்பான பணிகளில் சளைக்காது செயலாற்றவேண்டும் என்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் வினயமுடன் வேண்டுகோள்விடுப்பதுடன் ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்து ஈருலகிலும் வெற்றிசமூகமாகமாற வல்ல இறைவனிடம் பிரார்த்திக்குமாறும் கேட்டுகொள்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .