2026 மே 04, திங்கட்கிழமை

ஓட்டமாவடியில் நவீன வசதிகளுடன் பொதுச்சந்தை அமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 மார்ச் 24 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்  


மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் நவீன வசதிகள் கொண்ட பொதுச்சந்தைக் கட்டிடத் தொகுதியொன்றை இவ்வருடத்திற்குள் அமைப்பதற்கு கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடற்றொழில்; நீரியல்வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன ஓட்டமாவடி பொதுச்சந்தைக்கு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை விஜயம் செய்தார்.

இதனைத் தொடர்ந்தே நவீன வசதிகளுடனான பொதுச்சந்தை கட்டிடத் தொகுதியொன்றை அமைத்துத் தருவதாக அங்குள்ள மீனவ வியாபாரிகளிடம் உறுதியளித்தார். 

இதன்போது தற்காலிகக் கட்டிடத்திலேயே தாங்கள் தற்போது வியாபாரம் செய்து வருவதாகவும் தண்ணீர் வசதியின்றி கஷ்டப்படுவதாகவும் அமைச்சரிடம், ஓட்டமாவடி பொதுச்சந்தை மீனவ வியாபாரிகள் கூறினர். அத்துடன், இவ்விரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுத்தருமாறும் அமைச்சரிடம், மீனவ வியாபாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இவ்வருடத்திற்கான திணைக்கள அபிவிருத்தித் திட்டத்தில் நவீன வசதிகளுடனான சந்தைக் கட்டிடத் தொகுதியை அமைத்து தருவதுடன் இவ்விடத்தில் நிரந்தரமாக தண்ணீர் கிடைப்பதற்கான வசதிகளைச் செய்வதாகவும் உறுதியளித்தார்.
ஓட்டமாவடி அல் மதீனா கிராமிய மீனவர் அமைப்பின் அழைப்பின் பேரிலேயே ஓட்டமாவடி பொதுச்சந்தைக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன வருகை தந்தார்.

அமைச்சருடன் கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிமால் ஹெட்டியாராச்சி, கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்கள முகாமைத்துவப் பணிப்பாளர் விஜய குணவர்த்தன, கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்கள தொழில் துறைப் பணிப்பாளர் நந்தசேன, மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் உள்ளிட்ட பலர் வருகை தந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .