2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கல்வி பணிப்பாளரின் இடமாற்றல் தீர்மானத்திற்கு மாகாண சபை உறுப்பினர் கண்டனம்

Super User   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளரை இடமாற்றுமாறு ஏறாவூர் நகர சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் சிறுபிள்ளைத்தனமானது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் இரண்டு தடவைகளில் அகில இலங்கை ரீதியில் முன்னணி வகித்துள்ள வலயமாகும். இந்த வலயம் சாதனைகள் எதிர்காலத்திலும் படைக்க வேண்டும் என்று மக்கள் பிராத்தித்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு இந்த வலயம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளரின் நடவடிக்கைகளினால் வலயம் பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஏறாவூர் நகர சபை தவிசாளரினால் உண்மைக்கு புறம்பான முறையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டானது சிறு பிள்ளைத்தனமானதாகும். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட ஏனைய விடயங்களை பார்ப்பதற்கும் அதனை வழிநடத்துவதற்கும் மேலதிகாரிகள் உள்ளனர்.

இதனை விடுத்து நகர சபை தவிசாளர் கல்வியில் தேவையற்ற முறையில் கையாடல் செய்வதை எவராலும் அனுமதிக்க முடியாது. இந்த வலயம் பின்நோக்கி செல்கின்றது என்ற குற்றச்சாட்டினை முன்வைத்துள்ள ஏறாவூர் நகர சபை தவிசாளரின் கூற்றினை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

கடந்த காலங்களில் வலயக் கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய யூ.எல்.எம்.ஜெயினுதீனைகூட ஏறாவூர் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் மீதும் குற்றஞ்சாட்டினார்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக கல்வியில் அரசியலை பிரயோகிக்க நகர சபை தவிசாளர் முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது.

ஏறாவூர் நகர சபை பிரதேசத்தில் செய்யப்பட வேண்டிய ஆயிரம் பணிகள் உள்ளன. அவற்றில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். தற்போது கடமையாற்றும் வலய கல்விப் பணிப்பாளர் மிகவும் திறமையான நிருவாகியாவார். இவரை இடமாற்றுமாறு கோருவது சிறுபிள்ளைத் தனமான நடவடிக்கையாக கருதுகிறேன். இந்த வலயக் கல்வி அலுவலகத்தில் ஒருவர் மாத்திரமே வலயக் கல்விப் பணிப்பாளராக இருக்க முடியும்.

இங்குள்ள எல்லோரும் வலயக் கல்விப் பணிப்பாளராக இருக்கமுடியாது. ஏறாவூர் நகர சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானம் நடைமுறைக்கு வந்தால் ஆசிரியர்களைக் கூட மாற்றுவதற்கு நகர சபையிலேயே தீர்மானம் எடுக்க வேண்டி வருவது சாத்தியமா? இதனை செய்வது சரிதானா என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X