2025 மே 02, வெள்ளிக்கிழமை

செங்கலடி மத்திய கல்லூரி மீதான உண்மைக்கு புறம்பான தகவல்களுக்கு கண்டனம்

Kogilavani   / 2013 நவம்பர் 21 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

செங்கலடி மத்திய கல்லூரி தொடர்பாக அண்மைக் காலங்களில் பல்வேறு தரப்பினரால் வெளியிடப்படும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

பாடசாலையின் நலன்கருதி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு சேறுபூசும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் மேற்படி சங்கம வேண்டுகோள்விடுத்துள்ளது.

செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிதிக்காக செல்லம் திரை அரங்கில் நான்கு பட காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் வெளியிடப்பட்டுவரும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் தொடர்பாக பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

'செங்கலடி மத்திய கல்லூரியானது 2000 இற்கும் மேற்பட்ட மாணவர் தொகை கொண்ட ஒரு 1எ.பி தரப் பாடசாலையாகும். இப்பாடசாலையில் நான்கு ஆய்வு கூடங்களுடன், கணினிப் பிரிவு, பல்லூடக அறை, இரண்டு நீர்த்தாங்கிகள் போன்றவை காணப்படுகின்றன.

இதன் காரணமாக பாடசாலையின் மாதாந்த மின்சாரக் கட்டணம் சராசரியாக 20 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் வலயக் கல்வி அலுவலகம் பாடசாலையின் மாதாந்த மின்சாரக் கட்டணமாக 1500 ரூபா மாத்திரமே வழங்குகின்றது. மிகுதியினை பாடசாலையே ஏதாவது ஒரு முறை மூலம் பெறவேண்டும்.

இதுவரை காலமும் நன்கொடையாளர்கள் கொடுத்த நன்கொடை மூலம் பாடசாலை இதனைச் செலுத்தி வந்தாலும், தற்போது அந் நன்கொடைகள் கிடைக்கப்பெறுவதில்லை. இதனால் பாடசாலையில் மின்சார நிலுவை தேங்கி, மின்துண்டிப்பிற்கான அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.

இந்நிலையிலேயே பழைய மாணவ சங்கம் பாடசாலையின் நலன்கருதி செல்லம் திரையரங்குடன் இணைந்து நிதியுதவிக் காட்சியினை பல அச்சுறுத்தல்களுக்கும், தடங்கல்களுக்கும் மத்தியில் மேற்கொண்டது. இதனால் ஈட்டப்பட்ட தொகை 2 இலட்சத்து 61 ஆயிரம் ரூபா ஆகும். இதில் ஒரு இலட்சம் ரூபா செல்லம் திரையரங்கிற்கும் மிகுதி பாடசாலைக்கும் வழங்கப்பட்டது. எனினும் பாடசாலையின் நன்மை கருதி செல்லம் திரைப்பட உரிமையாளர் ஒரு இலட்சம் ரூபாவினை மீண்டும் பாடசாலையின் இவ்வருட பரிசளிப்பு விழாவின் பொருட்டு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இங்கு விநியோகிக்கப்பட்ட நுழைவுச் சீட்டுக்களின் பெறுமதி சாதாரணமாக திரையரங்கில் விநியோகிக்கப்படும் நுழைவுச் சீட்டுப் பெறுமதியினை (ரூபா 300) விடக் குறைவாகும். அதாவது ரூபா 100 ஆரம்ப நிலை மாணவர்களுக்கும், ஏனைய மாணவர்களுக்கும், வெளியாருக்கும் ரூபா 250 பெறுமதியான நுழைவுச் சீட்டுக்களும் விநியோகிக்கப்பட்டன.

பாடசாலை மாணவரிடையே இந்நுழைவுச் சீட்டுக்கள் வற்புறுத்தலின் பேரில் விற்கப்படவில்லை. மாணவர்கள் விரும்பியே இதனைப் பெற்றுக்கொண்டனர்.

இங்கு ஆரம்ப நிலை மாணவர்களுக்குக் கார்ட்டூன் படமும், ஏனைய மாணவர்களுக்குப் பிரத்தியேகமாக சந்திரமுகி படமும் காண்பிக்கப்பட்டது. ஏனைய இரு காட்சிகளும் வெளியாருக்காகக் காட்டப்பட்டன. இப்படக்காட்சி பாடசாலை விடுமுறை நாளில் நடத்தப்பட்டதாலும், ஒரு நாள் நிகழ்வு ஆதலாலும் அலுவலகத்தில் அனுமதி பெறவேண்டியதில்லை என்பதையும், ஆசிரியர்களே மாணவர்களை ஒழுங்கு செய்து தங்களது கண்காணிப்பின் கீழ் அழைத்துச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு படக்காட்சி மூலம் பாடசாலைக்கு நிதி திரட்டுவதானது என்றும் புதிய விடையமல்ல. பல பாடசாலைகள் கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. பாடசாலைக்கு வழங்கப்படும் அரச நிதி போதாவிடின் பாடசாலையின் தேவையின் பொருட்டு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதில் தவறொன்றுமில்லை.

மேலும் இக்காலங்களில் திரையரங்குகள் மாத்திரமே திரைப்படத்தினைக் காண்பிப்பதில்லை. அனைவரது வீடுகளிலும் தொலைக்காட்சி உள்ளது. அதன் மூலமாக மாணவர்கள் பலதரப்பட்ட படங்களைப் பார்க்கின்றனர்.

மேலும் இங்கு காண்பிக்கப்பட்ட கார்ட்டூன் படமும், சந்திரமுகி படமும் மிகமோசமான வன்முறைகளையோ, ஆபாசக் காட்சிகளையோ கொண்ட படங்களல்ல. சிறுவர் முதல் பெரியோர் வரை பார்க்;கக்கூடிய படங்களே. ஆகவே நாங்கள் மேற்கொண்ட நிதியுதவிக் காட்சியால் மாணவர்கள் பாதிக்கப்படுவது என்பது வெறும் பொய்யுரையே. மேலும் செல்லம் திரையரங்கு ஏற்கனவே மட்டக்களப்பில் பிரபல்யமான திரையரங்கு. அதற்கு நாங்கள் விளம்பரம் செய்யவேண்டிய அவசியமும் இல்லை.

தற்போது காணப்படும் பாடசாலை மேம்பாடு நிகழ்ச்சித் திட்டத்திற்கமைய பாடசாலை அபிவிருத்திக் குழுவில் பழைய மாணவர்களின் அங்கத்துவமும், செயற்பாடும் வலியுறத்தப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்திற்கமைய பாடசாலையை சமூகமே பராமரிக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. இந்நிலையில் சமூகத்தினால் பாடசாலை நலன் கருதி மேற்கொள்ளப்படும் நற்செயல்களுக்கு சேறு பூசும் வகையில் அவதூறுச் செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இத்தால் விநயமாகக் கேட்டுக்கொள்கிறோம்' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .