2025 மே 01, வியாழக்கிழமை

போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் மாநாடு

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்


குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

 'விழுது' ஆற்றல் மேம்பாட்டு மையம் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சாந்தி சச்சிதானந்தத்தின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள விதவைகள் செயலணியின் தலைவியர் 80 பேர் போரினால் பாதிக்கப்பட்ட இந்த விதவைகளின் மாநாட்டில் பங்குபற்றினர்.

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்களின் இயலாற்றலை மேம்படுத்தும் வகையில் அவர்களைக் கிராமங்கள் தோறும் ஒன்றிணைத்துச் செயலணிகளாக மாற்றும் திட்டத்தின் ஒரு கட்டமாக இந்த மாநாடு கூட்டப்படுவதாக 'விழுது' ஆற்றல் மேம்பாட்டு மையம் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சாந்தி சச்சிதானந்தம் தெரிவித்தார்.

இப்பெண்கள் எதிர்காலத்தில் தமது நலன் கருதி எற்படுத்த விரும்பும் அரச கொள்கைத் திட்டங்களின் அடிப்படையை விபரிக்கும் விதவையர் பட்டயம் ஒன்றினை அங்கீகரித்து வரித்துக்கொள்வதற்கு இம்மாநாடு பெருந்துணை புரியும் என்று அவர் மேலும் சொன்னார்.

விழுது அமைப்பானது,  மாதர் சங்கங்களின் ஊடாகவும், அவை அமைக்கப்படாதவிடங்களில் தனியாகவும், உருவாக்கி அவர்களுக்கான வலுப்படுத்தலை செயற்படுத்தி வருகின்றது.

இதனை முதற்கட்டமாக யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கடந்த ஒன்றரை வருடங்களாக
மேற்கொண்டிருக்கின்றது.

இத்திட்டத்தின் கீழ் ஆயுத வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் உரிமைகள் தொடர்பாகவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்குமுகமாக செயற்படுத்த வேண்டிய விசேட கொள்கைத் திட்டங்கள் பற்றியும் தேசிய ரீதியாகப் பரிந்துரை நடவடிக்கைகளையும் விழுது முன்னெடுத்து வருகின்றது.

நாம் பணிபுரியும் சகல மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட எண்பது விதவைகள் செயலணியின் தலைவியர் ஒன்று கூடும் இம்மாநாட்டின் பிரதான நோக்கமானது கடந்த 4 மாதங்களாக இப்பட்டயத்தின் உள்ளடக்கம் தொடர்பாக சகல செயலணிகளுடனும் கலந்துரையாடப்பட்டது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும் என்று தெரிவித்தார்.

மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விழுது மாவட்ட  இணைப்பாளர்கள் உட்பட சுமார் நூறிற்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .