Gavitha / 2015 மார்ச் 02 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பிரதேசத்தின் அபிவிருத்திக்குத் துணை செய்கின்ற விடயங்களை வெளிக்கொண்டு வருகின்ற ஊடகவியலாளர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அதேவேளை அந்த ஊடகங்களும் பாராட்டுக்குரியவை என மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் தெரிவித்தார்.
பற்றி நியூஸ் (Batti News) எனும் இணைய தளத்தின் 4ஆவது வருடப் பூர்த்தியும் அந்த இணைய தளத்தின் அச்சு ஊடகமாக 'கிழக்கு' எனும் சஞ்சிகை வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரி மண்டபத்தில், பற்றி நியூஸ் இணைய தளத்தின் ஆலோசகர் வி. ரவீந்திரமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுமு; போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
'பிரதேசத்தினதும் சமூகத்தினதும் நாட்டினதும் சமூக பொருளாதார வளர்ச்சியில் ஊடகவியலாளர்களின் பங்கும் பணியும் மகத்தானது.
பாரம்பரிய கலை கலாசார சிறப்பம்சங்களையும் பிரதேசத்தினதும் சமூகங்களினதும் உயர் விழுமியங்களையும் கட்டிக் காக்கின்ற அதேவேளை அடுத்த சந்ததிக்கு அதனை எடுத்துச் செல்கின்ற பணியையும் ஊடகங்கள் செய்கின்றன.
ஒரு சில சந்தர்ப்பங்களில் துரதிருஷ்டவசமாக, சமூகத்தில் குழப்பங்களையும் மனக்கசப்புகளையும் ஏற்படுத்துகின்ற நேர் எதிரான விடயங்களும் நடந்து விடுகின்றன.
இது பற்றி சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்கள் சுய மீளாய்வு செய்து கொள்வது அவர்களது பணிக்கு நல்லதாக இருக்கும்.
யுத்த காலங்களில், யுத்தப் பிரதேசங்களில் மிகச் சிரமங்களுக்கும் உயிர்ப் போராட்டத்துக்கும் மத்தியிலும் அரசாங்க அதிபராக கடமை செய்யக் கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்திருக்கின்றது.
அந்த வேளைகளில் மக்களின் குறை நிறைகளை வெளியுலகத்துக்கு எடுத்துச் செல்வதில் ஊடகங்கள் நிருவாகத்தினரோடு இணைந்து பணியாற்றியதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
நான் என்றுமே ஊடகங்களின் பணியை மதிக்கின்ற ஒருவர் என்பதால்தான், இன்றும் பல முக்கியமான நிகழ்வுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு இந்த ஊடக நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருக்கின்றேன்.
எதிர்காலத்திலும் நிருவாகத்தினரோடு சேர்ந்து பிரதேச அபிவிருத்திக்குத் துணை புரிகின்ற அதேவேளை, மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் ஆக்கபூர்வமான வழிகளில் வெளிக்கொண்டு வருகின்ற ஊடகப் பணிகளை நான் வரவேற்கின்றேன்' என்றார்.
கல்வியாளர்கள், அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், கலை இலக்கிய ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பற்றி நியூஸ் ஊடகக் குழுமத்தின் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டதோடு பற்றி நியூஸ் இணைய தளத்தின் பிரதம ஆசிரியரும் ஸ்தாபகருமான ராமகிருஸ்ணன் சயனொளிபவன் சேவை பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது 'கிழக்கு' எனும் மாதாந்த சஞ்சிகையும் பிரதம ஆசிரியர் சயனொளிபவனால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

35 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago