Suganthini Ratnam / 2015 ஜூன் 14 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தில் கல்வி அமைச்சின் கீழுள்ள வலயக்கல்வி அலுவலகங்களில் நிலவுகின்ற 175 உதவிக் கல்விப் பணிப்பாளர் (விசேட பாடங்கள்) பதவிக்கான வெற்றிடங்களை தற்காலிகமாக நிரப்புமாறு கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பான கடிதம் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்தார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளரின் 03ஃ07ஃ2014 திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் இலங்கை ஆசிரியர் சேவையை சேர்ந்த (இ.ஆ.சே. தரம்-1) பொருத்தமான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று உரிய முறையில் மாகாணக் கல்விப் பணிப்பாளரின் சிபாரிசுடன், கிழக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் 175 இற்கும் மேற்பட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்களை நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யும்வரை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக தற்காலிக நியமனங்களை வழங்கும் பொருட்டு கிழக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஆனால், 11 மாதங்கள் கடந்த நிலையிலும், பொருத்தமான ஆளணியினைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகப் பரீட்சை இதுவரையில் நடத்தப்படாதமை வேதனையளிக்கிறது. இந்த இழுத்தடிப்பு முறைகேடான ஆட்சேர்ப்புக்கும் வழி வகுக்கக்கூடும் என்று கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் சந்தேகிக்கிறது. அதாவது, முறையானதொரு ஆட்சேர்ப்புக்கு முரணாகக் கிழக்கு மாகாணத்தின் பல வலயங்களில் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நியமனங்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் விருப்பு, வெறுப்புக்கேற்ப அடிப்படைத் தகுதியேனும் கவனத்திற்கொள்ளப்படாமல், மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளன. இந்நியமனங்கள் கண்டிக்கத்தக்கவை என்பதோடு, இவை உடனடியாக இரத்துச் செய்யப்படவும் வேண்டும் எனக் கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம், கிழக்கு மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுக்கின்றது. அத்தோடு, அரசியல் தலையீடு அற்றதும், நம்பகத்தன்மை வாய்ந்ததும், வெளிப்படைத் தன்மை வாய்ந்ததுமான, ஆட்சேர்ப்பினையே நாம் எதிர்பார்க்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago