2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’அரச பெருந்தோட்ட காணியில் 300 ஏக்கரை வெளியாருக்குக் கொடுக்க இடமளியோம்’

Kogilavani   / 2021 மார்ச் 31 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி மாவட்டத்தில் இரு வேறு அரச பெருந்தோட்டங்களில் 300 ஏக்கர் காணியை வெளியாருக்குக் கொடுப்பதற்ககு எடுக்கப்படும் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த மத்திய மாகாண சபையின் அவைத் தலைவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவருமான து.மதயுகராஜா, அக் காணியை வெளியாருக்குக் கொடுக்க இடமளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

கண்டி டெவோன் உணவகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், கண்டி மாவட்டத்தில் அரச பெருந்தோட்ட யாக்கத்துக்குச் சொந்தமான இரங்கலை, கல்டூரிய டிவிசனில் 100 ஏக்கரும் மெதமஹநுவர வூட்சைட் தோட்டத்தில் 200 ஏக்கரும் தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத வெளியாருக்கு வழங்க இரகசியமாகவும் கபடத்தனமாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். 

இவ்விடயமானது பெருத்தோட்ட கூட்டுத் தாபனத்தின் தலைவருக்கோ அல்லது தொடர்புடைய பலருக்கும் தெரியாத வகையில் மிகவும் கச்சிதமாக திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இம் மாதம் 17 ஆம் திகதி, கண்டி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், அவை வெளியாருக்கு வழங்கப்படுவதை வண்மையாகக் கண்டிப்பதுடன் அதற்காக தொழிலாளர்களை இணைத்துப் போராடவும் தயங்கப் போவதில்லை என்றார்.  

'எனது 30 வருட அரசியல் வரலாற்றில்  கண்டி மாவட்டத்தில்  தோட்டத் தொழிலாளி அல்லாத வெளியாருக்கு அரச பெருந்தோட்ட யாக்கக் காணிகளை வழங்கியது கிடையாது. அவ்வாறு வழங்க முயற்சித்த பல சந்தர்ப்பங்களில் அதற்கு எதிராகப் போரடியுள்ளேன்.  அதனைத் தடுத்து தோட்ட மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுத்துள்ளேன்.

'கடந்த சில மாதங்களுக்கு முன், மக்கள் பெருந்தோட்டச் சபைக்குச் சொந்தமான ஹந்தான தோட்டத்தில் ஒரு பகுதியை கண்டி வைத்தியசாலைக்கு அருகில் உள்ளவர்களுக்கு வழங்க எடுக்கப்பட்ட முயற்சியை தொடர்புடையவர்களுடன் பேசி தடுத்து நிறுத்தினோம். அதேபோல் உலப்பனை பகுதியிலும் 5 ஏக்கர் பெருந்தோட்டக் காணிகளை ஒரு சிலருக்கு  வழங்க முற்பட்டபோதும் அதனையும் தடுத்தோம். 

'மடுல்கலை கெலேபொக்க தோட்டத்திலும் 10 ஏக்கர் காணியை வெளியாருக்கு வழங்க முன் வந்தபோது தோட்ட மக்களுடன் இணைந்து தடுத்துள்ளேன். தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் அல்லது வீடு கட்டும் வகையில் காணிகளை கொடுப்பதில் தவறில்லை. அவ்வாறு நானும் பெற்றுக் கொடுத்துள்ளேன். உதாரணமாக பல்லேகல, கித்துலேமட, அம்பலமான, நக்கில்ஸ் என பலவற்றைக் குறிப்பிடலாம்.

'கண்டி மாவட்டத்தைப் பொருத்தவரை பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் வாழ்வதால் பெருந்தோட்டக் காணிகளை வெளியாருக்கு வழங்குவதன் மூலம் தொழிலாளர்களது இருப்பையும் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் தாரை வார்க்கின்றோம். 

'எனவே இ.தொ.காவின் பொதுச் வெயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானி கவனத்துக்கும் இவ்விடயத்தை எடுத்துச் சென்றுள்ளோம்.  மேற்படி இரு தோட்டக் காணிகளையும் பாதுகாக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X