2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

இந்தியப் பட்டதாரிகள் “நிச்சயம் வருவர்”

Yuganthini   / 2017 மே 10 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வரதராஜன் யுகந்தினி

பெருந்தோட்டத் துறையிலுள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, விஞ்ஞான பட்டதாரிகள் 100 பேரை, தமிழ்நாட்டு அரசாங்கம், இலங்கைக்கு அனுப்பி வைக்கும் என்று, கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தின் போது, இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்படும் என்றும் கூறினார்.

இது தொடர்பாக அவர் இன்று (10) கருத்து தெரிவிக்கையில்,

“மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில், 844 தோட்ட பாடசாலைகள் இருக்கின்றன. அவற்றுக்கு, விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது

“தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வரவுள்ள ஆசிரியர்களுக்கான சம்பளத்தை தமிழ்நாடே வழங்கவுள்ளது. அவர்களுக்கான தங்குமிட வசதிகளை மாத்திரம், இலங்கை அரசாங்கம் செய்துகொடுக்கவுள்ளது.

“இந்திய அரசாங்கத்தின் இவ்வாறான உதவிகளின் மூலம், தோட்டத்துறை மக்களது பிரச்சினைகளை தீர்க்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்” என்று இதன்போது அவர் கூறினார்.

எனினும், இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கு, இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின், இன்று (10) கூறுகையில்,

“நாம் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால், பல மாவட்டங்களில் தமிழ் பட்டதாரிகள், வேலையின்றி உள்ளனர். இவர்களைக் கொண்டு, இந்த வெற்றிடங்களை நிரப்ப முடியும். வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு, ஒப்பந்தம் அடிப்படையில் குறித்த பகுதியில் ஆசிரியர் நியமனத்தை வ​ழங்கலாம்.

​“எமது நாட்டில் 24 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. அதில், 7 கல்வியியல் கல்லூரிகளே தற்போது இயங்குகின்றன. இந்நிலையில், போதியளவான வளங்கள் எமது நாட்டில் இருக்கும்போது, அதனை பயன்படுத்தாமல், இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்தது அல்ல.

“அப்படியானால், கல்வியியல் கல்லூரிகளுக்கு, தமிழ் மாணவர்களைக் கூடுதலாகச் சேர்த்து, அவர்களுக்குப் பட்டங்களை வழங்குவதனூடாக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று கூறினார்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், இந்த வெற்றிடங்களை நிரப்பக் கூடியளவுக்கு விஞ்ஞான பட்டதாரிகள் அல்லது ஆங்கிலம் கற்பிக்கக்கூடியவர்கள் இல்லையா? என்று கேள்வியெழுப்பிய அவர், இராஜாங்க அமைச்சரின் இந்தச் செயற்பாட்டுக்கு, இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .