2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

எரிபொருள் நிலையத்துக்கு எதிர்ப்பு

Kogilavani   / 2016 ஜனவரி 08 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டவளை, ஸ்டிரதன் தோட்டப்பகுதியில் அமைக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கான ஆரம்பப் பணிகள் நேற்று (7) முன்னெடுக்கப்பட்ட போதிலும் தொழிலாளர்களின் எதிர்ப்பு காரணமாக  அப்பணிகள் கைவிடப்பட்டன.

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ஸ்டிரதன் தோட்டத்தின் டீ கப் என்ற இடத்திலேயே இந்த எரிபொருள் நிலையம் அமைக்கப்படவுள்ளது.

இப்பகுதியில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் எரிபொருள் நிலையம் அமைக்கப்படின் அந்நிலையத்தின் கழிவுகள் குடிநீரில் கலந்துவிடும் எனவும் இதனால் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும்; தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையத்தை வேறொரு இடத்தில் அமைக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்நிலையில், பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போதிலும், மக்களின் எதிர்ப்பு காரணமாக அப்பணிகள் கைவிடப்பட்டன.

இதனையடுத்து, தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்துக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, 'இந்நிலையம் அமைப்பதனால் மக்கள் பயன்படுத்தி வரும் குடிநீருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது' என தோட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

இது தொடர்பாக வட்டவளை பெருந்தோட்டக் கம்பனியின் பிரதி பொது முகாமையாளர் ரொபீன் வின்டரிடம் கேட்டபோது, 'எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்காக தேசிய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதி பெறப்பட்டுள்ளது.  இந்நிலையம் அமைக்கப்படுவதால் குடிநீருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது' என்றார்.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் சந்தை கட்டடத் தொகுதி  ஒன்றும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

தோட்ட நிர்வாகம் வழங்கிய உறுதிமொழியைத் தொடர்ந்து, எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டதுடன் இந்நிலையத்தை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள், இன்று முதல் தொடரப்படவுள்ளதாக தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .