2026 ஜனவரி 21, புதன்கிழமை

’ஜீவனுக்கு நாவடக்கம் தேவை’

Kogilavani   / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தொடர்பாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சுரமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ள கருத்து, அனைத்து தாய்மார்களையும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாகச் சாடிய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பாசறையில் வளர்ந்து வந்தவன் என்ற அடிப்படையில், இதனை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், மலையகத்தின் தந்தையென அனைவராலும் போற்றப்படுகின்றன அமரர் சௌமியமூர்த்தி தொண்டாமானின் பாசறையில் மிகவும் கௌரவமாக வளர்தெடுக்கப்பட்டதாகவும் கண்ணியமான மரியாதைக்குரிய அரசியலை செய்ய வேண்டும் என்பதையே அவர் கற்றுத்தந்தார் என்றும் தெரிவித்தார்.

“அதேபோன்று அமரர் ஆறுமுகன் தொண்டமான், இந்த அமைப்பை மிகவும் பொறுப்புடன் கட்டிக்காத்து வந்துள்ளார். அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் நான் அந்த பாசறையில் இருந்து வெளியேறியப் போதிலும் இதுவரையில் நான் அவ்வமைப்பை எந்தச் சந்தர்ப்பத்திலும் விமர்சனம் செய்ததில்லை. அதற்கு நான் அந்த பாசறையில் வளர்ந்து வந்தவன் என்பதே காரணம்.

“பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் சிரேஷ்ட அரசியல்வாதி. அவர் இந்த நாட்டில், முக்கிய பிரதி அமைச்சராக பதவி வகித்தவர். எனவே எக்காரணம் கொண்டும் யாரையும் கொச்சைப்படுத்த முடியாது.

“இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறக் கூடாது. இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நாவடக்க வேண்டும். மலையக மக்களுக்கு தலைமை தாங்குகின்றேன் இளைஞர்களை வழிநடத்துகின்றேன் என்று வாய்ச் சொல்லில் வீரராக இல்லாமல், அதனை செயலிலும் காட்ட வேண்டும். மலையக இளைஞர்களுக்கு பிழையான வழிகாட்டலை செய்துவிடாதீர்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X