2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மரத்திலான தற்காலிக வீடுகள்

Kogilavani   / 2021 மார்ச் 26 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

இராகலை இரண்டாம் பிரிவு  தோட்டத்தில், தீ விபத்தினால் வீடுகளை இழந்த 14 குடும்பங்களுக்கு, மரங்களிலான தற்காலிக வீடுகளை அமைக்கும் பணி தோட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தோட்டத்தில் தேயிலைக் கன்றுகள் உற்பத்தி செய்யப்படும் இடத்திலேயே மரத்திலான வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேற்படித் தோட்டத்தின் இரண்டாம் பிரிவில், கடந்த 12ஆம் திகதி அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால், 14 வீடுகளைக் கொண்ட குடியிருப்புகள் சேதமாகின.

இந்நிலையில் மேற்படிக் குடியிருப்புகளில் வசித்து வந்த 14 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் தோட்டத்தின் பிள்ளைப் பராமரிப்பு நிலையம் மற்றும் கோவில் மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு தனி வீடுகளை அமைத்துக் கொடுக்க தோட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சு, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இருப்பினும் இவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வரை, தற்போது அத் தோட்டத்தின் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை இடம்மாற்றம் செய்து தற்காலிகமாக அமைக்கப்பட்டு வரும் வீடுகளில் தங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமது வீட்டு உபகரணங்களை முற்றாக இழந்துள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக வீடுகளில் அவர்களின் வாழ்க்கையை முன்கொண்டு செல்ல தோட்ட நிர்வாகம், நுவரெலியா மாவட்டச் செயலகம்,செஞ்சிலுவை அமைப்பு, இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் சமூகநல பொது அமைப்புகள் என பலரும் பொருட்கள் மற்றும் வீட்டு உபகரணங்களை வழங்கி வருகின்றனர்.

அத்தோடு நின்று விடாது பாதிக்கப்பட்டுள்ள 14 குடும்பங்களுக்கும் காலம் தாமதிக்காது பாதுகாப்பான இடத்தில் நிரந்தர வீடுகளை உடனடியாக அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தோட்ட மக்கள் பிரதான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X