2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தவும்

Sudharshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை தொழில் நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்தி, பிரஜாசக்தி ஊழியருக்கான இரண்டு இலட்சத்து பதினையாயிரம் ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக வழங்கி பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் தொழிலை பெற்றுக்கொடுக்க அமைச்சர் பழனி திகாம்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆறுமுகம் முத்துலிங்கம் கோரியுள்ளார்.

ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆறுமுகம் முத்துலிங்கம், மலையக புதிய கிராமம், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரத்திற்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சொக்கன் முருகதாசன் என்ற ஊழியர், கடந்த 2008ஆம் ஆண்டு  பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி முதல் மொனராகலை பிரஜா சக்தி நிறுவனத்தின் காவலாளியாக இருந்து வந்துள்ளார். இவரது சேவைக் காலத்தில் மாதம் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இவரது தொழில் எக்காரணமுமின்றி, கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக, மொனராகலை உதவித் தொழில் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், பதுளை தொழில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில், கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கை விசாரணை செய்த பதுளை தொழில் நீதிமன்றத் தலைவர் ஏ.எம்.ஏ.கருணாதிலக்க, சொக்கன் முருகதாசன், எக்காரணமின்றியும் வேலை நீக்கம் செய்யப்பட்டமை சட்ட விரோதமானதாகுமென்றும் வேலை நீக்கம் செய்யப்பட்ட காலத்துக்கான இழப்பீட்டுத் தொகையாக இரண்டு இலட்சத்து பதினையாயிரம் ரூபாவினை பாதிக்கப்பட்டவர் பெற்றுக்கொள்ள வசதியாக, மொனராகலை உதவித் தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் வைப்பீடு செய்ய வேண்டுமென்றும் அவர் செய்து வந்த காவலாளி தொழிலை, மீளவும் சேவைக்கால பாதிப்பில்லாமல் வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கின் தீர்ப்பினை பிரஜாசக்தி நிறுவனம் இதுவரை அமுல்படுத்தாததினால், வேலை நீக்கம் செய்யப்பட்ட சொக்கன் முருகதாஸ் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளார். ஆகவே, மேற்படி விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தி, அத்தீர்ப்பினை அமுல்படுத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன்' என அக்கடிதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .