2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

பதுளை மாவட்டத்தில் 3 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு கஷ்டம்

Sudharshini   / 2016 பெப்ரவரி 03 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் மூன்று பிரதேச செயலகப்பிரிவுகள் கஷ்;டப்பிரதேச செயலகப் பிரிவுகளாகவே இருந்து வருகின்றன' என மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பதுளை வை.எம்.ஏ.மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற இளைஞர் அமைப்பின் பதுளை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது,

'இலங்கையிலேயே, க.பொ.த. (சாஃத) பரீட்சையில்  மிக குறைந்த பெறுபேறுகளை பெற்றவர்கள் பதுளை மாவட்டத்தில் மீகாகியுல பிரதேச செயலகப் பிரிவிலேயே இருக்கின்றனர். பதுளை மாவட்டத்தில் காலம் காலமாக அரசியலில் இருந்துவரும் நிமால் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா, சமரவீர குடும்பத்தினர் உட்பட பலர், பதுளை மாவட்டத்தில் மேற்கொண்டு வந்த சமூக மேம்பாட்டு வேலைத்திட்டங்களின் பயன்தான் இவை. பதுளை மாவட்டத்தின் பின்னடைவுகள் குறித்து அவதானிப்போமேயானால், மேற்கண்ட தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று எண்ண தோன்றுகின்றன. எமது நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியைக் கொண்ட நாடு கியூபாவாகும். ஐம்பது வருட காலப்பகுதியில் எமது நாடு ஒலிம்பிக் பதக்கம் இரண்டை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால், கியூபா  இதுவரை 384 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளது.

எமது நாட்டில்; ஐம்பது குடும்பங்களுக்கு ஒருவர் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையாளராக இருந்து வருகின்றார். ஆனால், கியூபா நாட்டில் 112 குடும்பங்களுக்கு ஒருவர் விஞ்ஞானியாக இருந்து வருகின்றார். எமது நாட்டில் தினமொன்றுக்கு 11 பேர் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. அவர்களில் ஐவர் இருபது வயதுக்கும் குறைந்தவர்களாவர். ஆனால், கியூபாவில் தற்கொலை செய்பவர்கள் கிடையாது. கியூபா நாட்டின் 120 பேருக்கு ஒருவர் வைத்தியராக இருந்து வருகின்றமையும் விசேட அம்சமாகும்.

பதுளை மாவட்டத்தில் ஒரு வருடத்துக்கு பன்னிரண்டாயிரம் இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புக்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். இதற்கென நிரந்தர வேலைத்திட்டமொன்று இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.

இந்நாட்டின் சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும் சமூகத்தை நல்லதொரு நிலைக்குக் கொண்டுவரவும் கடந்த 60 வருடங்களாகவே ஆட்சியாளர்களால் முடியவில்லை' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .