2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பெல்மதுளை நகரில் அடிப்படை வசதிகள் இன்மையால் மக்கள் அவதி

Kogilavani   / 2021 மார்ச் 22 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி பெல்மதுளை நகரில், எவ்வித அடிப்படை வசதிகளும் இன்மையால் நகருக்கு வரும் பயணிகள் முதல் அனைவரும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு-பதுளை வீதியில் அமைந்துள்ள பெல்மதுளை நகரில், பிரதான மூன்று பாடசாலைகள் காணப்படுவதுடன் இப்பாடசாலைகளில் 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். நகரைக் கடந்தே மேற்படி மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர்.

அத்துடன் நகரை அண்மித்து அமைந்துள்ள தோட்டங்கள், கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பொருட் கொள்வனவுக்காக மேற்படி நகருக்கே வந்துச் செல்கின்றனர்.

நகரில் அமைந்துள்ள மலசலகூட தொகுதி போதிய பராமரிப்பு இன்றி துர்நாற்றம் வீசுவதாகவும் பிரதான பஸ் நிலையத்தில் மலைநீர் நிரம்பி வெள்ளக்காடாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாராந்தச் சந்தை நடக்கும் தினங்களில், வீதியின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

பெல்மதுளை நகரில் அமைந்திருந்த பொலிஸ் நிலையம், வேறு ஒரு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதால், முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக பொலிஸ் நிலையத்தைத் தேடி நீண்டதூரம் நடந்துச் செல்ல வேண்டியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் நகரங்கள், கிராமங்கள் அபிவிருத்திச் செய்யப்பட்டு வருகின்ற போதிலும், பெல்மதுளை நகரம் இதுவரை எவ்வித அபிவிருத்தியுமின்றியே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஏனைய நகரங்களைப் போன்று சகல வசதிகளும் உடைய நகரமாக பெல்மதுளை நகரை அபிவிருத்திச் செய்வதற்கு சம்பந்தப்பட்டத் தரப்பினர் முன்வர வேண்டும் என்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X