2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

பொலிஸ் நிலையத்தை இடமாற்ற தீர்மானம்

Sudharshini   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சங்கீதன்

நுவரெலியா- நானுஓயா காந்தி மண்டபத்துக்கு அருகில் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த பொலிஸ் நிலையத்தை, வேறு ஓர் இடத்தில் அமைப்பது தொடர்பில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டம், நேற்று திங்கட்கிழமை (15) நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் ப.சக்திவேல், மேற்படி பொலிஸ் நிலையத்தை வேறு ஓர் இடத்தில் அமைக்குமாறு பிரேரணையை முன்வைத்தார்.

இப்பிரேரணையில் அவர், 'கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள், கோப்புகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்த முறையும் அவ்வாறு இன்றி, இங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்' என்றார்.              

'காந்தி மண்டபம் அமைந்துள்ள பகுதியில், புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எமது மக்கள் கலை, கலாசார நடவடிக்கைகளை இந்த மண்டபத்தின் வாயிலாகவே முன்னெடுக்கின்றனர்.   இதற்கருகில்  பொலிஸ் நிலையம் அமைவது பொருத்தமற்றது. எனவே, அதனை வேறு ஓர் இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

மத்திய மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு, 'காந்தி மண்டபத்தை  அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, பொலிஸ் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றி அமைப்பதே பொருத்தமாக இருக்கும்' என்றார்.

இதனை தொடர்ந்து வேறு ஓர் இடத்தில், பொலிஸ் நிலையத்தை அமைப்பது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

மேலும் 'நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்புகள், கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் மரக்கம்பங்களால்
அமைக்கப்பட்டவை என்பதால் தற்போது அவை பழுதடைந்த நிலையில் உள்ளன.

தற்போது அவை முறிந்து விழும் நிலையில் இருப்பதால் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு உடனடியாக அவற்றை அகற்றி, கொன்கிறீட் தூண்கள் அமைக்கப்பட வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மின்சார சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பழனி திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன்; தொண்டமான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .