2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மாகாண பாடசாலைகளுக்கு புதிதாக 5,000 ஆசிரியர்களுக்கு நியமனம்: இராதா

Sudharshini   / 2016 மே 10 , மு.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

'மாகாண பாடசாலைகளுக்கு  கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், கணினி துறைசார்ந்த 5,000 ஆசிரியர்களை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.  அதற்கான அனுமதியையும் அவர் வழங்கியுள்ளார். இதன்மூலம் மாகாண பாடசாலைகளில் குறைபாடாக இருக்கும் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகின்றது' என இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியா, கிகிலியம்மான மகா வித்தியாலயத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் அணிவித்தலும் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட பாடசாலைக்கான நீர் விநியோக திட்டத்தை பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வும் இன்று (10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,

'தற்போது பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் மாணவர்கள் கட்டாயம் 17 வருடங்கள் கல்வி கற்க வேண்டும். பாடசாலை கல்வி முடிந்ததும் பெறுபேறுகளை மாத்திரம் கையில் எடுத்துச் செல்லாமல் எதிர்காலத்தில் தொழில்வாய்ப்பு தொடர்பான தொழில் பயிற்சிகளையும் பெற்றுச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கூடாக மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஒரு தொழில் பயிற்சியை பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பயிற்சிப் பெற்றுச் செல்லும் மாணவர் வேலையில்லா திண்டாட்டத்துக்கு உள்ளாகமாட்டார். இனிமேல் வேலையின்மை பிரச்சினைகளை குறைக்கலாம்' எனவும் அவர் கூறினார்.

'மாணவர்களின்  ஒழுக்கம், பெறுபேறு, பாடசாலையின் சூழல், இணைப்பாடவிதான செயற்பாடுகளின் பெறுபேறுகள், விழாக்களின் ஒருங்கிணைப்பு போன்றவற்றில் ஒரு பாடசாலையில் அபிவிருத்தியை காணலாம். இவ்வாறான பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்' எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .