2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’வருடமொன்றுக்கு 2,000 தொழுநோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்’

Kogilavani   / 2021 மார்ச் 18 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

இலங்கையில் வருடம் ஒன்றுக்கு 2,000 தொழுநோயாளர்கள் இனங்காணப்படுவதாக தேசிய தொழுநோய் தடுப்புப் பிரிவின் அத்தியட்சகர் வைத்தியர் ஜம்பா அலுத்வீர தெரிவித்தார்.

இன்னும் 10-15 வருடங்களில், இலங்கையில் தொழுநோய் ஆதிக்கம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

நாடளாவிய ரீதியில் மாவட்ட அடிப்படையில் தொழுநோய் தொடர்பில் சுகாதார தரப்பினரால் 2021ஆம் ஆண்டுக்கான மீளாய்வுகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நுவரெலியாவில், நேற்று (17) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்தார். 

2021ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில், மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் தொழுநோய் தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் அதனடிப்படையில் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணத்தில் 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அதிகளவில் தொழு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் வருடம் ஒன்றுக்கு இரண்டாயிரம் வரையான தொழு நோயாளர்கள் இனங்காணப்படும் நிலையில், மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தொழுநோய் தொடர்பாக பாதிப்பு குறைந்த நிலையிலும் இது தொடர்பில் விசேடமான மீளாய்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதேநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொதுவைத்தியசாலை, ரிகலகஸ்கட வைத்தியசாலைகளில், தொழுநோய்க்கான விசேட சிகிச்சை அளிக்கப்படும் பிரிவுகள் உள்ளன என்றும் இதில் தொழுநோய் அறிகுறிகள், நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் சென்று கிளினிக் முறையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் கூறினார்.

ஆனால் தமது உடலில் ஏற்படும் தொழுநோய் தொடர்பில் அறிந்துகொள்வதுத் தொடர்பில் அறியாதபட்சத்தில் தோள்களில் ஏற்படும் நோய் அடையாளங்களை வைத்தியர்களிடம் காட்டி வைத்தியசாலை ஊடாக இலவச சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதில் நோயாளர்கள் அச்சப்படுவதால் இது ஏனையோருக்கும் பரவி பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். 

தொழுநோய் என்பது விரைவில் குணமாகும் நோய் என்பதால், முறையான சிகிச்சைகளை வழங்க இலவச வைத்தியசேவைகள் நமது நாட்டில் இருக்கின்றன என்றும் அவர் உலக சுகாதார அமைப்பு மற்றும் பொது அமைப்புகளும் இந்த நோயை குணமாக்க இலவச சிகிச்சைகளுக்காக பல உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X