2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

“இந்திய பிரதமரை அணித்திரண்டு வரவேற்க வேண்டும்”

Kogilavani   / 2017 மே 05 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

“நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் தலைவரான பிரதமர் நரேந்திரமோடி மலையகத்துக்கு வரும்போது 15 இலட்சம் இந்திய வம்சாவளி மக்களின் சார்பாக நாம் அணித்திரண்டு அவருக்கு அமோக வரவேற்பு அளிக்க வேண்டும்” என, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடியின் மலையக விஜயம்தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டம், நேற்று வியாழக்கிழமை டிக்கோயா காசல்ரீ ஹொலிடே விருந்தகத்தில் நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1957ஆண்டு மலையகத்துக்கு விஜயம் மேற்கொண்டார். மலையகத்துக்கு விஜயம் மேற்கொண்ட அவர், வர்த்தக சமூகத்தினரை சந்தித்தாரேயொழிய, தோட்டத் தொழிலாளர்களை சந்திக்கவில்லை.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களை, இந்திய பிரதமரொருவர் சந்திப்பது இதுவே முதல்தடவையாகும்.  அவர் குறுகிய நேரமே எம்மோடு இருந்தாலும், அவரின் வருகை எம்மைப்பொறுத்த வரையில் மிகவும் பெறுமதி வாய்ந்ததாகும். எமது மக்களின் சார்பில் பல கோரிக்கைகளை தமிழ் முற்போக்கு கூட்டணி, பிரதமர் மோடியிடம் கையளிக்கவுள்ளது.

 இன்று இந்திய அரசாங்கத்தின் 4 ஆயிரம் தனி வீடுகளோடு, எமது அரசாங்கத்தின் பாரிய நிதி ஒதுக்கீட்டில் தனி வீட்டுத்திட்டம் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே, இவற்றுக்கு மேலதிகமாக இந்திய அரசின் வீடுகள் மேலும் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இது தவிர மலையக மாணவர்களின் உயர்கல்வி, தொழிற்பயிற்சி முதலானவற்றுக்கும் நாம் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளோம்.

இலங்கை வரும் பாரதப் பிரதமர், இந்திய வம்சாவளி மக்கள் நலனில் நிச்சயம் அக்கறை காட்டுவார். நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரை இலங்கையில் வாழும் 15 இலட்சம் இந்திய வம்சாவளி மக்கள் சார்பில் நாம் வரவேற்க வேண்டியது எமது கடமையும் பொறுப்பும் ஆகும்.

அதற்கான ஏற்பாடுகள் அமைச்சர்கள் ப.திகாம்பரம், மனோ கணேசன் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இதில் அரசியல், தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் கலந்துகொள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அழைப்பு விடுக்கின்றேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .