2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

வெளிமாவட்டப் பரீட்சார்த்திகள்: அறிக்கையிடக் கட்டளை

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

வெளிமாவட்ட மாணவர்களுக்கு, நுவரெலியா மாவட்டத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கல்வி இராஜாங்க அமைச்சர்
வே. இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரிடம் கோரியுள்ளார்.

'2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த  உயர்தரப் பரீட்சை தற்போது நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பல புதுமுக மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக பெற்றோரும் ஆசிரியர்களும் எனது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்' எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  

'இந்தச் செயற்பாடானது எமது மலையக மாணவர்களின் கல்வியில்  பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு செயலாகும். க.பொ.த உயர்தரத்தில், வெட்டுப்புள்ளிகள் ஓரளவு குறைவாக இருக்கின்ற மாவட்டமாக நுவரெலியா மாவட்டமும் இருக்கின்றது. இந்த சந்தர்ப்பம் முழுமையாக எமது மலையக மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் அக்கறையாக இருக்கின்றேன்.

ஏனெனில், எமது மலையக மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர்கின்ற போது, பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்;. மாகாண கல்வி அமைச்சராக நான், இருந்த கால கட்டத்திலும் இவ்விடயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளேன்' என்றார்.

'இன்று நான், முழு நாட்டுக்;குமான கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்தாலும் எனக்கு வாக்களித்த மலையக மக்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க வேண்டியது எனது பொறுப்பாகும்' என்றார்.

'வெளிமாவட்டப் பரீட்சார்த்திகள் விடயத்தில் குறிப்பிட்ட சில பாடசாலைகளின் அதிபர்கள், பணம் பெற்றுக்கொண்டு இறுதி நேரத்தில் மாணவர்களைப் பாடசாலைகளுக்கு உள்வாங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

குறிப்பாக நுவரெலியா, ஹட்டன் பகுதிகளில் உள்ள 12  பாடசாலைகளில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம், தொடர்பில் முழுமையான அறிக்கை கிடைத்தபின்பு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு தகுதி, தராதரம் பார்க்காது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இத்தகையவர்களுக்காக யாரும் பரிந்துரைகளை என்னிடம் கொண்டுவர வேண்டாம்' என அவர் இதன்போது கோரினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .