2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ்நிலைய குண்டுவெடிப்பில் பொறுப்பதிகாரி உட்பட 14 பொலிஸார் படுகாயம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 01 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

இன்று மாலை 3.45 மணியளவில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உட்பட 14 பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரொருவர் தன்னிடமிருந்த கைக்குண்டை வெடிக்கவைத்தமையாலேயே மேற்படி அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற ஒருவரை கஞ்சாவுடன் கைதுசெய்த பொலிஸார் நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் மேல்மாடியில் வைத்து அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். இவ்வோளையில் திடீரென கீழே ஓடிவந்த அச்சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த கைக்குண்டை எடுத்து, அருகில் யாரும் வந்தால் அக்குண்டை வெடிக்கவைப்பேன் என்று மிரட்டியுள்ளார். இந்நிலையில் அவரிடமிருந்து கைக்குண்டை பொலிஸார் பாய்ந்து பறிக்க முற்பட்ட வேளையில் சந்தேகநபர் கைக்குண்டினை வெடிக்க வைத்துள்ளார்.

இவ்வெடிப்பு சம்பவத்தினால் சந்தேகநபர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதுடன் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி, நிர்வாக பொறுப்பதிகாரி உட்பட 14 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 2 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாருடன் சேர்ந்து இராணுவத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .