2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக கொழும்பில் பேச்சுவார்த்தை

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 16 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தோட்டத் தொழிற்சங்கங்கள் சிலவற்றுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில், தோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் நடைமுறை  சம்பளப் பிரச்சினைகள் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை  தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் தோட்டத்தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையில்  பேச்சுவார்த்தையொன்று கொழும்பில் நடைபெற்றது.


இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்  சார்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ஹரிசந்திரசேகர,  இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக  இதன் பொதுச்செயலாளர் கே.வேலாயுதம் மற்றும் மொஹிதின்  பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக ஓ.ஏ.இராமையா ஆகியோரும் முதலாளிமார் சம்மேளனம் சார்பாக லலித் ஒபேசேகர உட்பட பெருந்தோட்டக் கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின்  பொதுச்செயலாளர் கே.வேலாயுதம் கருத்துத்தெரிவிக்கையில்,


வேலைப்பளுவுக்கு அமைவான ஊக்குவிப்புக் கொடுப்பனவு விடயத்தில் தோட்ட நிர்வாகத்தினர் ஒப்பந்தத்தை மீறி தன்னிச்சையாகச் செயற்படுவது, ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயாதினம் போன்ற விடுமுறை தினங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அன்றைய தினம் ஒன்றரை நாள் சம்பளம் வழங்கப்படவேண்டுமென ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்படுகின்றபோதிலும், அதற்காக வேலை இலக்கை அதிகரிப்பது, வேலைக்கு சமுகமளிக்கும் தொழிலாளி ஒருவர் வேலைப்பளுவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாவிட்டாலும் ஒரு நாள் சம்பளம் வழங்கப்படவேண்டுமென்ற கூட்டு ஒப்பந்த நிர்ணயத்தை மீறுவது தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கேற்ப ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயாதினம் போன்ற விடுமுறை தினங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அன்றைய தினம் ஒன்றரை நாள் சம்பளம் வழங்கப்படவேண்டும். இந்தச் சம்பளம் தொடர்பாக சம்பளச் சீட்டில் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயாதினம் போன்ற விடுமுறை தினங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒன்றரை நாள் சம்பளம் வருகைக் கொடுப்பனவில் உள்ளடக்கப்படவேண்டும். ஒரு நாள் சம்பளத்திற்காக தொழிலாளர்கள் எடுக்க வேண்டிய கொளுந்தின் நிறை தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் தன்னிச்சையாக தீர்மானிக்காமல் தோட்டத்தொழிற்சங்க தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும்.


இவ்விடயங்கள் தொடர்பில் தோட்டக்கம்பனிகள் உடன்பாட்டுக்கு வராவிட்டால் கூட்டு ஒப்பந்த    தொழிற்சங்கங்கள் தீர்க்கமான முடிவொன்றினை எடுக்க நேரிடும் என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .