2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தோட்ட தொழிலாளர்க்கு வாழ்க்கை செலவு கொடுப்பனவு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 28 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

தோட்டத்தொழிலாளர்கள் பயன்படுத்துகின்ற முக்கிய உணவுப்பொருட்களான கோதுமை மா மற்றும் தேங்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால் தோட்டத்தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளனர் என்று இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: "கூட்டொப்பந்தத்தின் மூலமாக தோட்டத்தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற சம்பளம் ஏற்கனவே கிடைக்கவில்லை. இந்த நிலையில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்வதால் தோட்டத்தொழிலாளர்கள் தொடர்ந்து வறுமை நிலையை எதிர்நோக்கி வருகின்றனர்.

தோட்டத்தொழிலாளர்களின் முக்கிய உணவுப்பொருளான கோதுமை மாவின் விலை படிப்படியாக அதிகரித்து வருகின்ற அதேவேளை, கோதுமை மா ரொட்டிக்காக பயன்படுத்துகின்ற தேங்காயின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது. தோட்டப்பகுதிகளில் ஒரு கிலோ கோதுமை மா 94 ரூபாவுக்கும் தேங்காய் ஒன்று 60 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில் 2011ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரசாங்கம், அரசாங்க ஊழியர்களுக்கு குறிப்பிட்டளவு சம்பளவுயர்வு வழங்கப்படவுள்ள அதேவேளை வாழக்கைச்செலவு கொடுப்பனவான 600 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. எனினும் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கைச்செலவு பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனவே தற்போதைய வாழ்க்கைச்செலவு அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு  வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாழ்க்கைச்செலவு கொடுப்பனவான 600 ரூபாவை தோட்டத்தொழிலாளர்களுக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X