2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'பெரும்பான்மையினத்தவர்களை அதிகமாகக் கொண்ட சூழலில் தமிழ் மொழியை கற்பிக்கும் ஒரேயொரு பல்கலைகழக்கழகம்'

Kogilavani   / 2011 ஜனவரி 07 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.கோகிலவாணி)

இலங்கையில் உள்ள தமிழ் மொழி மூலப் பாடங்களை கற்பிக்கும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும்  தமிழர்கள் அதிகமாக வாழும் ஒருச் சூழலில் அமைந்துள்ளன. ஆனால்  சகோதர  மொழியினர் அதிகமாக வாழும் ஒரு சூழலில் தமிழ்மொழிப்பாடங்களை நடத்தும் பல்கலைக்கழகம் அமைந்திருக்கின்றதென்றால் அது சப்ரகமுவ பல்கலைக்கழகம் மட்டும்தான் என சப்ரகமுவ பல்கலைகழகத்தின் மொழித்துறை விரிவுரையாளர் நாகேஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றுவரும் எழுத்தாளர் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று வெள்ளிக்கிழமை 'ஈழத்துத் தமிழ் இலக்கியம்' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற அரங்கில், 'ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் சப்ரகமுவ பல்கலைக்கழக மொழித்துறையில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இலக்கிய ஆய்வு முயற்சிகள்'  குறித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இப் பல்கலைக்கழகத்தில் கல்விப்பயிலும் சிங்கள மாணவர்களும் தமிழை ஒரு பாடமாக பயில்கின்றனர். அதேப்போன்று தமிழ் மாணவர்கள் கட்டாய பாடமாக ஒரு வருடத்திற்கு சிங்கள மொழியை பயில்கின்றனர். கடந்த 15 வருடங்களாக தமிழ் பட்டதாரிகள் பலரை இப் பல்கலைக்கழகம் உருவாக்கிக்கொண்டிருக்கின்றது.

இவற்றை நான் சுட்டிக்காட்ட விரும்புவதற்குக் காரணம் இம் மாநாட்டில் சப்ரகமுவ  பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இலக்கிய ஆய்வு முயற்சிகள் குறித்து மட்டும் பேசுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது ஏன்? என ஒருவர் என்னிடம் கேள்வியெழுப்பியிருந்தார். அதற்காகதான் இதனை முதலில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

உண்மையில் சகோதர மொழியினர் இருக்கும் சூழலில் அமைந்திருக்கும் ஒரேயொரு பல்கலைக்கழகமென்றால் அது சப்ரகமுவ பல்கலைக்கழகம்தான். கிழக்குப் பல்கலைக்கழகம்,  பேராதெனிய பல்கலைக்கழகம்,   யாழ்பல்கலைக்கழகம் என அனைத்து  பல்கலைக்கழகங்களும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ளன.

சிங்களவர்கள்  பெரும்பான்மையாக வாழும் சூழலில் கடந்த 15 வருடங்களாக தமிழ் மொழி குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது மட்டுமல்லாமல் பல தமிழ் பட்டதாரிகள் இங்கு கல்வி பயின்று வெளியேறிச் சென்றிருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்லாமல்,  சிங்கள மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கும் விரிவுரையாளராகவும் நான் இருக்கின்றேன். அதனால், சப்ரகமுவ பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழ்துறை குறித்த ஆய்வுகள் என்ற தொனிப்பொருளில் நான் பேசுகின்றேன் என அவர் தெரிவித்தார்.

இவ் ஆய்வரங்கில் யாழ்.பலகலைக்கழத்தின் தமிழியில்துறை தலைவர் பேராசியரியர் எஸ்.சிவலிங்கராஜா ,  கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் ஆகியோர் இணைத்தலைவர்களாகவும்,  இந்தியா திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் வை.ஜவகர் ஆறுமுகம்,  மூத்த எழுத்தாளர் தெனியான் ஆகியோர் ஆய்வு மதிப்பீட்டாளராகவும் செயற்பட்டனர்.

இந்த ஆய்வரங்கில் 'தமிழ் நாவல்கள் - சில போக்குகள் என்ற தொனிப்பொருளில் கலாநிதி.க.குனராஜா (செங்கை ஆழியான்),  'ஈழத்து தமிழ்த் திறனாய்வு வளர்ச்சி' என்ற தொனிப்பொருளில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் கலாநிதி துரைமனோகரன்,   'ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் 60 களுக்குப் பின்னரான பன்முக வளர்ச்சிப் போக்கும்'  என்ற தொனிப்பொருளில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை துணை விரிவுரையாளர் எஸ்.சி.எம்.பௌசி,  'மலையக தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி' என்ற தொனிப்பொருளில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை துணை விரிவுரையாளர் பெ.சரவணகுமார் ஆகியோரும் உரையாற்றினர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X