Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Princiya Dixci / 2015 மே 07 , பி.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.ஆ.கோகிலவாணி
பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்கள் தாமதமாவதற்கு அவர்கள் விண்ணப்பித்த முறைமையில் இருந்த பிழையே காரணமாக அமைந்துள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷணன் தெரிவித்துள்ளார்.
'ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனங்களின் போது நாங்கள் 6 விடயங்களை முக்கியமாக அவதானித்திருந்தோம். விண்ணப்பித்த பாடம், விண்ணப்பித்த பாடசாலை என்பவை இவற்றில் மிக முக்கியமானவையாகும். சிலர் 3 பாடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர், சிலர் 3 பாடசாலைகளை தெரிவுசெய்துள்ளனர். இதனால் விண்ணப்பித்த முறைமைக்கு ஏற்ப எமக்கு அவர்களை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்பட்டது. இதனாலேயே குறித்த திகதிகளில் எமக்கு நியமனங்களை வழங்க முடியாமல் போனது' எனவும் அமைச்சர் கூறினார்.
கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த 2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கமைவாக பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர் நியமனங்களுக்காக சுமார் 22 ஆயிரம் பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. ஆசிரிய உதவியாளர் நியமனங்களுக்காக விண்ணப்பிப்பவர்கள் தோட்டப்பகுதிகளுக்கு உட்பட்டவர்களாக இருக்கும் அதேவேளை, குறித்த தோட்டத்தில் 10 வருடம் வசித்தவராக இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டுமென்பது கட்டாயமானது' என்றார்.
இந்நிலையில், ஆசிரியர் உதவியாளர்களாக விண்ணப்பித்தவர்களில் அநேகமானவர்கள் மேற்படி இரு விடயங்களிலும் தகுதியற்றவர்களாக காணப்பட்டனர். இவர்களில் 12 ஆயிரம் பேர் தெரிவுசெய்யப்பட்டு இவர்களுக்கிடையில் பரீட்சைகள் நடத்தப்பட்டன. இவர்கள் பரீட்சையில் பெற்றுகொண்ட புள்ளிகளுக்கேற்ப 9 ஆயிரம் பேர் நேர்முகப் பரீட்சைக்கு தெரிவுசெய்யப்பட்டனர்.
கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற நேர்முகத்தேர்வின் போது 3,024 பேர் உதவி ஆசிரியர் நியமனங்களுக்காக தகுதிபெற்றனர். இவர்களில் அநேகமானவர்கள் ஒரு பாடசாலையை மட்டும் குறிப்பிடாது 3 பாடசாலைகளை குறிப்பிட்டுள்ளதுடன் 3 பாடங்களையும் குறிப்பிட்டுள்ளனர். எனவே இவ்விண்ணபங்களை தெரிவுசெய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார்.
தகுதிவாய்ந்தவர்கள் இதற்காக தெரிவு செய்யப்படவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இந்த ஆசிரியர் உதவியாளர் நியமனத்தை 3 கட்டங்களாக பிரித்துள்ளோம். முதல் கட்டத்தில் 1,668 பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை (8) நியமனம் வழங்கப்படவுள்ளது.
ஏனையவர்களுக்கு எதிர்வரும் 29ஆம் திகதிக்குள் நியமனத்தை வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அமைச்சு மற்றும் தொழிற்சங்கங்களின் தலையீடுகளின்றி திறமை மற்றும் தகுதிக்கேற்பவே இந்நியமனம் வழங்கப்படுகிறது' என அவர் மேலும் தெரிவித்தார்.
3 வருடத்துக்கு சேவைக்கால ஊதியம்
ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்படுவர்கள் 3 வருடங்களுக்கு பயிலுநர்களாகவே செயற்படவுள்ளனர். 3 வருட பயிற்சியின் பின்பு அவரவரின் தகைமைக்கேற்ப இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும். அதுவரை அவர்களுக்கு சேவைக்கால ஊதியமே வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பின்னடைவை எதிர்நோக்கியுள்ள மலையக கல்வியை உயர்த்துதல், மலையகத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், மலையகத்தில் வேலைவாய்ப்பற்றிருக்கும் படித்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டே இவ் ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
9 hours ago