2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

'அளுத்கம சம்பவத்திற்கு தூபமிட்டவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும்'

Kogilavani   / 2014 ஜூன் 19 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

'அளுத்கம இனவெறியாட்டத்திற்கு தூபமிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதன் ஊடாக மாத்திரமே இன சகவாழ்வை ஏற்படுத்த முடியும்' என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை வெளியிட்டுள்ள கண்டண அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்கள் காலம் தொட்டு பல்லாண்டு காலமாக இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையே நல்லுறவு நிலவுகிறது.

இந்நாட்டில் வாழுகின்ற பெரும்பான்மையான மக்கள் சமாதானத்தையும் சகவாழ்வையுமே விரும்புகின்றனர். 30 வருட காலங்கள் இந்நாட்டில் நிலவிய நிம்மதி இழந்த காலம் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதே இந்நாட்டை நேசிக்கின்றவர்களின் நேசமாக உள்ளது.

இந்நிலையில், சகவாழ்வுடன் வாழும் சிங்கள முஸ்லிம் இனவுறவை இனவாதத் தீயினால் எரியவைத்து அதில் குளிர்காயும்  அயோக்கிய செயற்பாட்டை பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புக்கள் புரிந்து கொண்டிருப்பது மிகவும் வேதனைமிக்க செயற்பாடு மாத்திரமின்றி கண்டிக்கத்தக்கதுமாகும்.

பொதுபல சோன  அமைப்பு உருவாக்கப்பட்ட 2012ஆம் ஆண்டு முதல் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் இனவாதத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

முஸ்லிம்கள் உண்ணும் உணவு அணியும் ஆடை, மார்க்கக் கடமைகள் என பல்வேறு விடயங்களில் எவ்வித காரணங்களுமின்றி மூக்கை நுழைத்து, வீண் பிரச்சினைக்குள் தள்ளும் நாகரிகமற்ற, மனித நேயமற்ற நடவடிக்கைகளை இந்ந பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன.

சிறுபான்மை மக்களை நசுக்க முயற்சிக்கும்  மாற்றுச் சக்திகளின் கைபொம்மைகளாக செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட பொது பல சேனா போன்ற இனவாத அமைப்புக்கள் அதன் இலக்கை அடைந்துகொள்வதற்காக மேற்கொண்ட இன வெறியாட்டத்தின் அகோர வெளிப்பாடே அளுத்கமயிலும் தர்ஹா நகரிலும் அததையண்டிய பிரதேசங்களிலும் நடந்தேரியுள்ள அழிப்புகளாகும்.

பிரச்சினைக்கான ஆரம்பத்தை எந்தத் தரப்பு தொடங்கியிருந்தாலும் தொடங்கியவர்கள் தொடர்பில் சட்டமும் சட்டத்தை நிலைநாட்டுகின்றவர்களும் அதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

எவர் குற்றம் செய்தாலும் அதனை சட்டமும் நீதி மன்றமும் நிலைநாட்டும். எதை மாற்றுத்தரப்பினர் புரிய வேண்டிய அவசியமில்லை.

காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கக்கூடியதாக இருப்பதுடன், அழிவுமிக்க செயல்கள் நடந்தேருவதற்கு  தூபமிட்டவர்கள் கைதுசெய்யப்படுவதுடன்  சிங்கள முஸ்லிம் இனவுறவு அப்பிராந்தியத்தில் மீண்டும் கட்டியெழுப்பட வேண்டும். அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கம்; என்ற வகையில் மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், உண்மைநிலையைக் கண்டறிவதற்காக ஆணைக்குழுவொன்று  அமைக்கப்படுதல் அவசியம். சட்டமும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சொந்த இடங்களில் மீண்டும் நிம்மதியாக அச்சமின்றி வாழ்வதற்காக அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்படுவது அவசியம்.

இக்கலவரத்திற்குத் தூபமிட்டவர்கள் எத்தகையவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்;டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என அமைச்சர் உதுமாலெப்பை விடுத்துள்ள கண்டண அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X