2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சொந்த ஊருக்குச் சென்ற இரணைதீவு மக்கள்

Niroshini   / 2017 மார்ச் 05 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மூன்றாவது தடவையாக,  கிளிநொச்சி - பூநகரி - இரணைதீவு மக்கள், இரணைதீவில் உள்ள புனித செபமாதா தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரணைதீவுப் பகுதியிலுள்ள 336 குடும்பங்கள், முழங்காவில் இரணைமாதா நகரில் இருந்து  வியாழக்கிழமை (02) பிற்பகல் 3.00 மணிக்கு, இரணைதீவுக்கு படகுகளில் சென்றன.

இரணைதீவு புனித செபமாதா தேவாலயத்தில், வௌ்ளிக்கிழமை காலை  8.00 மணிக்கு நடைபெற்ற வழிபாட்டில் கலந்துகொள்ள கடற்படையினர் அனுமதி வழங்கிய நிலையில், பூநகரி பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில், இரணைமாதா நகரில் இருந்து மேற்படி குடும்பங்கள், இரணைதீவுக்குப் படகுகளில் பயணித்தன.

வௌ்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு வழிபாட்டில் ஈடுபட்ட இம்மக்கள், வழிபாட்டின் பின்னர், முழங்காவில் இரணைமாதா நகருக்கு, இரணைதீவில் இருந்து படகுகளில் திரும்பியுள்ளனர்.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மூன்றாவது தடவையாக வழிபாட்டுக்கு இரணைதீவுக்கு இம்மக்கள் சென்று திரும்பியுள்ளனர். 

இரணைதீவில் அனுமதித்த நேரத்தினை விடக் கூடுதலான நேரத்தைச் செலவிட கடற்படையினர் அனுமதிக்கவில்லை என, இரணைதீவு சென்று திரும்பிய மக்கள் தெரிவிக்கின்றனர்.  

மேலும், இரணைதீவின் மக்கள், ஆலய வழிபாட்டுக்கு மாத்திரம் அனுமதித்த கடற்படையினர், அவர்களை மீண்டும் இரணைமாதா நகருக்கு அனுப்புவதில் குறியாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

1992ஆம் ஆண்டு, இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள், முழங்காவில் இரணைமாதா நகரில் தங்கியுள்ள குடும்பங்கள், இரணைதீவில் மீள்குடியேறவும் கடற்றொழிலில் ஈடுபடவும் அனுமதிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், அவை மறுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X