2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘நம்பிக்கையீனம் மலர்கிறது’

Niroshini   / 2017 மார்ச் 05 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.நிதர்ஸன்

 

“ஜனாதிபதி மீதான நம்பிக்கையீனம், தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்து வருகின்றது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

மேலும், “வட-கிழக்குப் பிரச்சினையை, ஜனாதிபதி தனியாகக் கையாள வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஜனாதிபதியிடம் கூறுங்கள் எனும் குறைகேள் அலுவலகம், ஐனாதிபதியால் நேற்று (04) திறந்து வைக்கப்பட்டது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“எங்கள் மக்கள், உங்களிடம் எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேற்றவில்லை என்ற நம்பிக்கையீனம் வளர்ந்து வருவதை, நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

"வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினை,  தனியே யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, இலங்கை முழுவதும் இருந்தாலும், 30 ஆண்டுகளுக்கு மேலாகப் போரினால் பாதிக்கப்பட்ட இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற பட்டதாரிகளுக்கு, வேலைவாய்ப்பை வழங்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. அவர்களுக்கு இப்பொழுது வேலைவாய்ப்பை வழங்காவிட்டாலும், குறிப்பிட்ட கால தவணைக்குள் மிகக் குறுகிய கால தவணைக்குள், ஒரு வாக்குறுதியை நீங்கள் கொடுக்க வேண்டும்.

"வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் என்பதற்கு முன்னர், நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்ற பொழுதும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதற்குப் பிறகும், எங்களுடைய மக்களுக்கு, குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களுக்கு அளித்த வாக்குறுதியில், 'முதலாவதாக, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கை விடுவிப்பேன்' என்று கூறியிருந்தீர்கள். அதன் பின்னர், 'ஆறு மாதங்களில் விடுவிப்பேன்' என்றும் நீங்கள் கூறியிருக்கின்றீர்கள்.

"இந்தக் கால அட்டவணை, மிகச் சிறியதளவு விடையே மக்களுக்கு கிடைத்திருக்கின்றது. அந்த மக்களது எதிர்பார்ப்பு, இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

"தமிழ் அரசியல் கைதிகள், இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதே போல, உங்களது அரசாங்கத்தில் காணிகள் விடுவிக்கப்பட்டு மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளில், நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்திருக்கின்றோம். அத்தோடு மீள்குடியேற்ற அமைச்சு, எங்களுடன் ஒத்துழைக்கவில்லை என்பதையும் இங்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்” என்றார்.

"30 ஆண்டுகளின் பின்னர், அதிலும் போர் முடிந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக, எங்கள் பிரதேசத்தில் உங்கள் ஆட்சிக்குப் பின்னரும் அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளிலும் நாங்கள் அடைந்த முன்னேற்றங்கள், மிகச் சிறியவை ஆகும். ஆனபடியால், வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில், நீங்கள் அதனைத் தெற்கோடு ஒப்பிடமாட்டீர்கள் என்று நம்புகின்றோம். அழிந்து போன எங்கள் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

"எங்கள் பிரதேசத்தில் அபிவிருத்தித் திட்டங்கள், வேலைவாய்ப்புக்களை வழங்கும் தொழில் திட்டங்கள், இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதே போல, மாகாணங்களுக்கு இருக்கின்ற அதிகாரங்களைக் கூட நிறைவேற்றவில்லை என்ற குறையும் இருக்கின்றது. ஆனபடியால், எதிர்காலத்தில் அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

"ஆகவே, வடக்கு, கிழக்குப் பிரச்சினையை, நீங்கள் தனியாகக் கையாள வேண்டும். அமைச்சரவையிலே அதற்கான தீர்மானத்தை எடுக்க வேண்டும். அதற்காக கட்டமைப்பை நீங்கள் உருவாக்க வேண்டும். அதே நேரத்தில், இனப்பிரச்சினைக்கான தீர்வும் அவசியமாகத் தேவைப்படுகின்றது” என்றும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X