2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வட மாகாணசபை அதிகாரங்கள் இறைமையின் நிமித்தம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்: சம்பந்தன்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 22 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சொரூபன், சுமித்தி தங்கராசா

'வட மாகாண தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவின் மூலம் பெறப்பட்டுள்ள மாகாணசபைக்கான அதிகாரங்கள் அனைத்தும் இறைமையின் நிமிர்த்தம் பகிர்தளிக்கப்பட வேண்டும்' என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், 'எமது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதைப் போன்று வடக்கு மாகாணசபை ஆட்சியை நடத்துவதற்கான அதிகாரம், நிர்வாக மற்றும் நீதி அதிகாரங்கள் அனைத்தும் மக்களுக்குரிய இறைமையின் நிமிர்த்தம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்' என்றார்.

'வடக்கு மாகாணத்தில் தற்போது இராணுவப் பிரசன்னம் காணப்படுகின்றது. இராணுவமானது தனது வேலைக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. இது தொடர்ந்து இடம்பெற நாங்கள் இடமளிக்கமாட்டோம். தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவினை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மக்களின் அடையாளங்கள் பேணப்பட வேண்டும். அத்தோடு அவர்களுடைய பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். அந்த வகையில் எம்மை தேர்ந்தெடுத்த மக்களின் உணர்வுகளை மதித்து அதனை உணர்ந்து செயற்பாடுவோம் என்ற உறுதிப்பாட்டில் நாம் அனைவரும் உள்ளோம் என்று இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

'மாகாண சபை பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் முதலமைச்சர் மாகாண சபை வேலைத்திட்டங்கள் தொடர்பாக விளக்கி ஊடகத்திற்கு அறிவிப்பார். தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில், எமது நிலைப்பாட்டினை தெளிவு படுத்தவேண்டி அவசியம் இருக்கின்றது. அந்த வகையில், 13வது அரசியல் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென்பது எமது நோக்கம்.

அது கட்டி எழுப்பப்பட்டு, அதிகார பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதுடன், நியாயமான நிலை நிற்கக்கூடிய நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தமிழ் மக்களின் நியாயமான, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதாக' அவர் சுட்டிக்காட்டினார்.

'தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்படவில்லை. மாகாண சபை அதிகாரம் வந்த பின்பு ஆட்சி புரிந்த பல அரசுகள் இந்த கருமம் சம்பந்தமாக செயற்பட்டு வந்துள்ளார்கள். தற்போதைய அரசாங்கமும் அவ்விதமான தீர்வை எடுப்பதற்கு சில முயற்சிகளை எடுத்து வந்துள்ளனர்.

மாகாண சபையில் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அமைச்சு தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் முதன் முறையாக மாகாண சபை கைப்பற்றியுள்ளோம், மாகாண சபையினை  எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாது மாகாண சபையினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான கருமங்களை கையாளுவோம்' என்றார்.

'தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்னும் சிந்தனை அரசாங்கத்திற்கு ஒருபோதும் இருக்க கூடாதென்றும் அவ்விடயம்  ஒருபோதும் நடைபெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

'வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் தெளிவாகவும் துணிவாகவும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஜனநாயகத் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்பட வேண்டுமென  வற்புறுத்தி கேட்கின்றோம்.

'வடமாகாண சபைத் தேர்தல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு - இலங்கை தமிழ் அரசுக் கட்சி நாட்டின் அரசியல் சரித்திரத்தில் முன்னெப்போதும் ஒருவரும் அடையாத ஆமோக வெற்றியீட்டியுள்ளது. வடமாகாணத்தில் ஏறத்தாழ 30 வீதமான ஆசனங்களையும், யாழ். மாவட்டத்தில் ஏறத்தாழ 90 வீதமான ஆசனங்களையும் கைப்பாற்றியுள்ளது.

மக்களின் ஜனநாயக தீர்ப்பு மிகவும் தெளிவாகவுள்ளது. ஐக்கிய, பிளவுபடாத நாட்டிற்குள் பாதுகாப்பாகவும் சுயமரியாதையோடும் கௌரவமாகவும் போதிய சுயாட்சி பெற்று வாழ்ந்து தமது நியாயமான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார அபிலாஇஷகளை அடைய விரும்புகின்றார்கள். 

இந்த இலக்கை அடைவதற்கு நாம் அர்பணிப்போடு செயற்படும் அதே வேளையில், அரசாங்கமும் தனது பங்களிப்பை முழமையாகச் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தத் தேர்தலின் பெறுபேறுகள் அனைவரும் ஆரோக்கியமான திசையில் பயணிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கின்றது.

இந்தத் தேர்தலில் நாம் சந்திக்க நேர்ந்த பலவிதமான துன்புறுத்தல்களின் மத்தியிலும் வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் தெளிவாகவும் துணிவாகவும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஜனநாயகத் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்பட வேண்டுமென  வற்புறுத்தி கேட்கின்றோம்.

எமது மக்கள் முழுமையாக எம்மை ஆதரிப்பதற்காக எங்கள் இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில் அவர்கள் தமது அபிலாஷைகளை அடைவதற்கு எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று கூறவிரும்புகிறோம்' என்று இரா. சம்பந்தன் மேலும் கூறினார்.

  Comments - 0

  • Mawahib Monday, 23 September 2013 04:19 AM

    Tamils community strength is given the lesson to the Muslims

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .