2021 மே 08, சனிக்கிழமை

கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: டெனீஸ்வரன்

Kogilavani   / 2014 மார்ச் 26 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'கணக்கீடுகளில் குளறுபடிகள் காணப்படும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் புதன்கிழமை (26) தெரிவித்தார்.

இது தொடர்பாக டெனீஸ்வரன் தமிழ்மிரருக்குத் தெரிவிக்கையில்,

'வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள கிராமப் புறங்களில் இயங்கும் அபிவிருத்தி சங்கங்களில் கணக்கீடுகளில் குளறுபடிகள் காணப்படுவதுடன், அச்சங்கங்களில் நிர்வாக சீரின்மையும் இடம்பெறுகின்றன. இவற்றினால் கிராமங்களின் அபிவிருத்திகள் பெரிதும் பாதிப்படைகின்றன. 

இதனால், கிராமங்கள் மற்றும் மக்களின் அபிவிருத்தியை முன்னேற்றும் நோக்கத்துடன், கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் கிராம முன்னேற்ற கழகங்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளோம்.

அண்மைக்காலங்களில் மாதர் அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் இலகு வட்டி கடன்களை மக்களுக்கு வழங்கி வருகின்றன.

இந்த கடன்களை குறைந்த வட்டி வீதத்தில் கையளிக்கும் போது, கிராம மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்ற முடியும், அதிகூடிய வட்டிக்கு கடன்களை வழங்கும் போது, இக்கடனுக்கான வட்டியை கிராம மக்களினால் செலுத்த முடியாமல் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில், குறைந்த வட்டிக்கு சுழற்சி முறையிலான கடன்களை வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

அத்துடன், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் கிராமமக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் நோக்கத்துடன், அப்பகுதிகளில் சிறு கட்டிடங்களை அமைத்துக் கொடுப்பதை நிறுத்தி விட்டு, கட்டிடத்திற்கான நிதியில் சிறு கைத்தொழில்களை அப்பகுதி மக்களுக்கு அமைத்துக் கொடுக்க முன்வர வேண்டும். அவ்வாறு சிறு கைத்தொழில்களை அமைத்துக் கொடுப்பதன் மூலம் கிராம மக்கள் தமது, வாழ்வாதாரத்தினை உயர்த்திக் கொள்ள முடியும்.

இதனால் கிராம மட்டங்களில்; அபிவிருத்தி நடைபெறும், இவ்வாறான நோக்கத்துடன் பல் துறைசார்ந்த அமைப்புக்களுடன், கிராம மக்களின் அபிவிருத்தியை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் குறித்து கலந்துரையாடி வருகின்றேன்.

அத்திட்டத்தின் மூலம் கிராம மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்ற முடியும் என்பதுடன், இவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் பல வருடங்களுக்கு முன்னெடுக்கக்கூடியதாக அமையும்' என்று அமைச்சர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X