2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இழுவைப்படகு மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பொ.சோபிகா, ற.றஜீவன்


தங்களின் இழுவைப்படகு தொழிலுக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மாற்றுத் தொழில் நடவடிக்கையை ஏற்படுத்தித் தருமாறு கோரியும் யாழ். வல்வெட்டித்துறை கிழக்கு பகுதியிலுள்ள  இழுவைப்படகு மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கட்கிழமை (06) ஈடுபட்டுள்ளனர்.

இழுவைப்படகு மீன்பிடியில் ஈடுபட்ட 23 மீனவர்களுடன் அவர்களின் குடும்பத்தவர்களும் இணைந்து ரேவடி கடற்கரை விநாயகர் கோவில் முன்றலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இழுவைப்படகு மீன்பிடி முறை மூலம் கடல்வளம் அழிக்கப்படுவதால், இம்முறையில் மீன்பிடிப்பதற்கு மத்திய கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சால் தடை விதிக்கப்பட்டது. இதற்கமைய, வடமாகாண மீன்பிடி அமைச்சு மேற்படி மீனவர்களின் இழுவைப்படகு மீன்பிடிக்கு தடை விதித்தது.

இதனால், தாங்கள் தொழில்வாய்ப்பை இழந்துள்ளதாகவும் தங்களின் பிள்ளைகள் கல்வி கற்கமுடியாதுள்ளதாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தை ஏற்பாடு செய்த வல்வெட்டித்துறை கிழக்கு கிராமிய கடற்றொழில் சங்கத் தலைவர் சி.சிவகணேஸ்  தெரிவிக்கையில்,

இழுவைப்படகுகளை தடைசெய்த வடமாகாண மீன்பிடி அமைச்சு, எமது வாழ்வாதார நலன்கருதி மாற்று வழிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். மாற்றுவழிகள் இல்லாமல், எங்களின் வாழ்வாதாரத்தை கொண்டுசெல்ல முடியாத நிலையிலிருக்கின்றோம்.

எமக்கு சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டுமொரு போராட்டத்தை மேற்கொள்வோம்  எனக் கூறினார்.

இது தொடர்பில் வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவிக்கையில்,

வடமாகாண எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமாக  கடற்றொழில் செய்வதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.
இங்கு 16 ஆயிரம் கடற்றொழில் செய்யும் குடும்பங்கள் உள்ளன. அதிக வசதிகளின்றி அவர்கள் கடற்றொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்கின்றார்கள்.

23 இழுவைப்படகு தொழிலாளர்களுக்கு அனுமதி கொடுத்து, 16 ஆயிரம் கடற்றொழில் செய்யும் குடும்பங்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும் செயற்பாட்டுக்கு  இடமளிக்கமாட்டோம்.

இது சட்டவிரோதமான செயல். மேற்படி மீனவர்கள் இது தொடர்பாக என்னிடம் கூறியபொழுது, சட்டத்துக்கு முரணான எந்தத் தொழில் செய்வதற்கும் அனுமதி இல்லை என்று கூறியுள்ளேன்.

எந்த இனத்தவராக இருந்தாலும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு எந்த அனுமதியும் வழங்கப்படமாட்டது எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .