2025 ஜூலை 14, திங்கட்கிழமை

யாழில் கொள்ளைக் கோஷ்டி கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்

யாழ்.மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டில் 11பேர் அடங்கிய மிகப்பெரிய கொள்ளைக் கோஷ்டியொன்றை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொஹான் மகேஸ் புதன்கிழமை (15) தெரிவித்தார்.

அத்துடன், மேற்படி கொள்ளைக் கோஷ்டியிடமிருந்து 1 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும அவர்; தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை, பழம் வீதியை சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேகநபரிடம், புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகநபர் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற பல திருட்டுக்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, பதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்படி சந்தேகநபரை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் 90 நாள் அனுமதி பெறப்பட்டு சந்தேகநபர் விசாரணை செய்யப்பட்டார்.

இதன்போது, மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 20, யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில் 12, சுன்னாகம் பொலிஸ் பிரிவில் 02, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் 03, கோப்பாய் பொலிஸ் பிரிவில் 05, தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில் 01 மற்றும் இளவாலை பொலிஸ் பிரிவில் 03 ஆகிய திருட்டு நடவடிக்கையில் சந்தேகநபருடன் இணைந்து மேலும் சிலர் ஈடுபட்டமை தெரியவந்தது.

இதனையடுத்து, திருட்டுடன் ஈடுபட்ட ஏழாலை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இருவரிடமிருந்தும் 36 மோட்டார்கள், 61 பவுண் நகைகள், 01 காஸ் சிலிண்டர், 01 நீர்இறைக்கும் இயந்திரம், 01 கமரா, 12 புடவைகள், 03 அலைபேசிகள், 01 தொலைக்காட்சி, 03 மேசை உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டன.

அத்துடன், கொள்ளையடித்த நகைகளை வங்கியில் அடைவு வைத்து அதன்மூலம் பெற்ற பணத்தை கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட படி ரக வாகனமும் மீட்கப்பட்டது.

தொடர்ந்து, இருவரும் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், முதலாவது பிரதான சந்தேகநபரின் மனைவி மற்றும் மகள் ஆகியோரும், கொள்ளை நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டனர்.

அனைவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (15) ஆஜர்ப்படுத்திய வேளையில் நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்துள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .