2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பாரம்பரிய பயிரினங்களை பயிரிட வேண்டும்: ஐங்கரநேசன்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக வடக்கில் இந்த ஆண்டு நிலவிய கடும் வரட்சி, இனிவரும் ஆண்டுகளிலும் நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிக நீர்ப்பாசனம் தேவைப்படும் கலப்பினங்களை மாத்திரம் முற்றுமுழுதாக நம்பியிராமல் வரட்சிக்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய பாரம்பரியப் பயிரினங்களுக்கு நாம் மீளவும் திரும்பவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
 
அழிந்துவரும் பாரம்பரியப் பயிரினங்களைப் பாதுகாக்கவென வடக்கு விவசாய அமைச்சால் 'வீரியம்' எனும் திட்டம்; முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி முழங்காவில், ஜெயபுரம் வடக்கு பல்நோக்கு மண்டபத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

'சுதேசிய இனங்களான பாரம்பரிய பயிர்கள் அதிக நீரோ, அதிகளவு இரசாயன உரங்களோ தேவைப்படாதவை. பீடைகளின் தாக்கத்துக்கு எளிதில் ஆளாகாதவை.

ஆனால், கலப்பினங்களின் வரவோடு பாரம்பரிய பயிரினங்கள் யாவும் வழக்கொழிந்துவிட்டன. மேலும் அதிகளவு இரசாயன உரங்களும் பூச்சுக்கொல்லி மருந்துகளும் கலப்பினங்களை விளைவிக்க பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் மோசமாகப் பாதிக்கப்படுவதோடு, உணவில் கலக்கும் இரசாயனங்களின் மூலம் நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது.

இதனால், கலப்பினப் பயிர்களுக்கு பதிலாக செயற்கை இரசாயனங்களை பயன்படுத்தாத இயற்கை வேளாண்மையை, உலக நாடுகள் ஊக்குவிக்க ஆரம்பித்துள்ளன.

இயற்கை அல்லது சூழலியல் விவசாயத்துக்கு கலப்பின பயிர்களை விட பாரம்பரிய பயிரினங்களே மிகவும் பொருத்தமானவை. இதனால், வழக்கொழிந்து அழிந்து போய்க்கொண்டிருக்கும் பாரம்பரிய இனங்களை மீட்டெடுத்து மீளவும் பயிரிடவேண்டிய தேவை எழுந்துள்ளது.

அதனாலேயே, நோய்நொடிக்கு ஆளாகாமல் எமது மண்ணில் வீரியத்துடன் வளரக்கூடிய பாரம்பரிய பயிரினங்களை பாதுகாக்கும் 'வீரியம்' என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

வீரியம் திட்டத்தில், நாம் விவசாயிகளுக்கு இலவசமாக பாரம்பரிய பயிர்களின் விதைகளை வழங்கினால், அறுவடையின் பின்னர் விவசாயிகள் எமக்கு இரட்டிப்பு மடங்கு விதைகளை தரவேண்டும்.

இந்த விதைகளை நாம் வேறு விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் விரைவிலேயே பாரம்பரிய இனங்களை மீட்டெடுத்து பெருமளவில் பெருக்க முடியும்' என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, அணில்வரியன், மொட்டைக்கறுப்பன், பச்சைப்பெருமாள், கறுப்புச்சீனட்டி, சுவந்தல், றோனால்பட்டம், படபொலஸ் போன்ற சுதேசிய நெல் இனங்களும் உப உணவு பயிர்ச்செய்கைக்கான பாரம்பரிய விதைகளும் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன், தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு தரமான கோழிக்குஞ்சுகளும் வழங்கப்பட்டன.

மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வட மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.ஹால்தீன், பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் அ.செல்வராசா, தெ.யோகேஸ்வரன், சகீலாபானு அசரக், பொ.அற்புதச்சந்திரன், உதவி விவசாய பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீரங்கன், விதை அபிவிருத்தி நிலையத்தின் பிரதிப்பணிப்பணிப்பாளர் எஸ்.சதீஸ்வரன், விதை அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் என்.செல்வகுமார், விவசாய ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஜே.அரசகேசரி, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் செ.கௌரிதிலகன், விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .