கிளிநொச்சி வலைப்பாடு கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், செவ்வாய்க்கிழமை (04) உத்தரவிட்டார்.
தடை செய்யப்பட்ட றோலர் மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 மீனவர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, அவர்கள் 3 றோலர் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து, 22 மீனவர்களுக்கும் எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது மீனவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், வழக்கு விசாரணை தவணை முறையில் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்படி 22 மீனவர்களில் 9 மீனவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து, 9 மீனவர்களும் நீதவான் அபராதம் விதித்தார்.
அத்துடன், மிகுதி மீனவர்கள் தொடர்பிலான வழக்கை ஜனவரி மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து நீதவான் உத்தரவிட்டார்.