2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

George   / 2014 நவம்பர் 08 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், ற.றஜீவன்
 
நெல்லியடி முள்ளிப்பகுதியிலுள்ள பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.கே.நடராஜா, வெள்ளிக்கிழமை (07) உத்தரவிட்டார்.
 
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
 
யாழ். நாகர்கோவில் கிழக்கு பகுதியை சேர்;ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான கலியுகமூர்த்தி சுகந்தி (வயது 36) கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி காணாமற்போயிருந்தார்.
 
மனைவி காணாமற்போனமை தொடர்பில் கணவன் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒக்டோபர் 21ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
 
தொடர்ந்து, ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி நெல்லியடி முள்ளி பகுதியிலுள்ள பற்றைக்குள் இருந்து அழுகிய நிலையில் மேற்படி பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
 
பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, மேற்படி பெண் பணத்திற்காக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
 
அதாவது, பெண் காணாமற்போன தினம் வங்கியொன்றில் நகைகள் அடைவு வைத்து பணம் எடுத்ததுடன், வங்கி கணக்கிலிருந்தும் பணம் எடுத்துள்ளார்.
 
இதனையடுத்து, பெண்ணின் தொலைபேசி பதிவுகளை வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
 
இதன்போது, கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் கைத்தொலைபேசியில் அதிக தடவைகள் உரையாடிய முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபர் கடந்த 5ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
 
சந்தேகநபரின் முச்சக்கரவண்டியும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
 
பருத்தித்துறை நீதிமன்ற அனுமதியை பெற்று, சந்தேகநபரை 48 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் வைத்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
 
தொடர்ந்து, மேற்படி சந்தேகநபர், வெள்ளிக்கிழமை (07) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
 
இதன்போதே நீதவான் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .