2025 மே 05, திங்கட்கிழமை

கற்பிட்டி ஆர்ப்பாட்டம்; மேலும் 12 மீனவர்களுக்குப் பிணை

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சிப்பிட்டியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்திய போது, சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட மேலும் 12 மீனவர்களைப் பிணையில் செல்ல புத்தளம் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (08) அனுமதி வழங்கியது.

கற்பிட்டி - குறிஞ்சிப்பிட்டியில் வீதியை மறித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் கடந்த மாதம் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

கற்பிட்டியில் 'லைலா' வலைகளைப் பாவித்து மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, மற்றொரு தரப்பு மீனவர்கள் இவ்வாறு வீதியை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீதியை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் காயத்துக்குள்ளானதுடன், மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, வான் ஒன்றும் தீக்கரையாக்கப்பட்டிருந்தன.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது மிக மோசமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் அடையாளம் காணப்பட்ட 24 மீன்வர்களை, கடந்த வியாழக்கிழமை (03) புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி நீதிமன்றம் விடுத்த அழைப்புக்கமைய புத்தளம் மாவட்ட நீதிமன்றில் 18 மீனவர்கள், தமது சட்டத்தரணிகள் ஊடாக ஆஜராகியிருந்தனர்.

இதன்போது, குறித்த 18 மீனவர்களையும் தலா ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.

மேலும், குறித்த வழக்கு விசாரணைக்குச் சமுகமளிக்காத மேலும் 6 பேருக்கு எதிராகவும் நீதிமன்றத்தினால் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற போது சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 12 மீனவர்கள், சந்தேகத்தின் பேரில் கற்பிட்டிப் பொலிஸாரினால், செவ்வாய்க்கிழமை (08) கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 12 மீனவர்களே, தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் இரு சரீரப்பிணையில் நீதவானால் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேவேளை, இந்த வழக்கு முடியும் வரை கற்பிட்டிப் பிரதேசத்தில் லைலா வலையைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு புத்தளம் நீதிமன்றத்தினால் கடந்த 3ஆம் திகதி தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X