2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

‘புத்தளம் மாவட்டத்தில் குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்படும்’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 01 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தி, புத்தளம் மாவட்டத்தின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கூறியதாவது,

“புத்தளம் மாவட்டத்தின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாத்திரமின்றி, பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இரண்டு கரங்களும் சேர்ந்தால்தான் ஓசை வரும் என்பது போல, பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே, குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியும்.

ஒவ்வொரு பிரதேசங்களிலும் காணப்படும் குற்றச்செயல்கள் தொடர்பில், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு தொலைபேசி மற்றும் பேஸ்புக் ஊடாக தெரியப்படுத்த முடியும். எமது அலுவலகத்துக்கு என, புதிதாக Divoffice Puttalama  என்ற பெயரில் பேஸ்புக் கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

பிரதேசத்தில் காணப்படும் குற்றச்செயல்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் கடமைபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவையில் திருப்தியின்மை போன்ற விடயங்கள் தொடர்பில், எனது கைத்தொலைபேசிக்கும் பேஸ்புக் இன்பொக்ஸ் ஊடாகவும் தெரியப்படுத்த முடியும்.

அத்தோடு, புத்தளம் நகர பாதுகாப்பு தொடர்பில், நகரத்திலுள்ள வர்த்தகர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளேன். புத்தளம் நகரத்தில் உள்ள ஒவ்வொரு வர்த்தக நிலையங்களுக்கும் முன்னால் உள்ள வீதியை கண்காணித்துக்கொண்டிருக்கும் வகையில், கண்காணிப்புக் கமெராக்களைப் பொருத்துமாறும் ஆலோசனை வழங்கவுள்ளேன்.

இவ்வாறு, நகர வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் பொருத்தப்படும் கண்காணிப்புக் கமெராக்கள் முழுதையும், இணையம் மூலமாக எமது அலுவலகத்தில் ஒன்றிணைக்க எதிர்பார்த்துள்ளோம். ஏதேனும் குற்றச்செயல்கள் நடக்குமாக இருந்தால், குற்றச்செயல்கள் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கமெராக்களைப் பரிசோதனை செய்து, அதன்மூலம் குற்றவாளிகளை இலகுவாக கண்டுபிடிக்க முடியும் என நம்புகிறோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X