2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஆபத்தில் கைகொடுக்கும் தோழன்

S.Sekar   / 2022 மார்ச் 19 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச.சேகர்

இலங்கை அந்நியச் செலாவணி இருப்பு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், கடந்த காலங்களைப் போன்று, 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடன் உதவியை வழங்க அண்டை நாடான இந்தியா முன்வந்திருந்தது. இந்த கடனைப் பெறுவதற்கான உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கைச்சாத்திட்டிருந்தமை பற்றி பரவலாக பேசப்பட்டது.

குறிப்பாக இந்தக் கடன் உதவி கிடைத்தமை தொடர்பில் பல தரப்பிடமிருந்தும் பலவிதமான கருத்துகள் வெளிப்பட்டிருந்தன. எவ்விதமான பிரதியுபகாரமுமின்றி இந்த உதவி வழங்கப்பட்டிருக்காது, நாட்டின் ஏதேனும் ஒரு பகுதி அல்லது வளம் இதற்கு பிரதியீடாக இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் போன்றவாறான கருத்துகளும் இதில் அடங்கியிருந்தன.

நாட்டில் பெரும்பாலும் சகல அத்தியாவசியப் பொருட்களும் தட்டுப்பாடு, பதுக்கல், கறுப்பு சந்தை தோற்றுவிக்கப்பட்டு, மக்கள் நாளாந்த உயிர் வாழ்வதற்கு அவசியமான நுகர்வுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு கூட நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய ஒரு நெருக்கடி நிலை உருவாகியுள்ள நிலையில், மக்களின் இந்தப் பிரச்சனைகள் எனக்குத் தெரியும், இருந்தாலும் இந்தப் பிரச்சனைகளுக்கு நான் பொறுப்பாளியல்ல எனக்கூறிவிட்டு, என் மீது நம்பிக்கை வைத்து, நீங்களே என்னை இந்தப் பதவிக்கு கொண்டு வந்தீர்கள். அதனால் என் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வையுங்கள் என பதவியேற்றதன் பின்னர் நாட்டு மக்களுக்கு ஐந்தாவது தடவையாக உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதன் கிழமை (16) குறிப்பிட்டிருந்தார்.

தேவையான இரண்டில் ஒன்று கிடைத்தது

தமது உரையில் கணக்கு வழக்குப் பற்றி சர்வசாதாரணமாக பில்லியன்களில் வருமானம் மற்றும் செலவு பற்றிக் குறிப்பிட்டு, இறுதியில் பற்றாக்குறை 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அமைந்திருக்கும் என மதிப்பிட்டுள்ளதாகச் சொன்னார். அந்த 2 பில்லியனில் ஒன்றைத் தானே எம் அண்டை நாடு கடன் உதவியாக வழங்க கைச்சாத்திட்டுள்ளது. அப்படியாயின், ஜனாதிபதி அவர்களின் கூட்டிக் கழித்தல் கணக்குப் படி நாட்டின் இந்த நெருக்கடிகள் நீங்குவதற்கு தேவையாக அமைந்திருப்பது இன்னொரு 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தானே.

அத்தியாவசிய பொருட்களுக்கே கடன் உதவி

உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்காக இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கான குறுங்காலத் தீர்வாக அமைந்துள்ளதாக இந்தியா தரப்பில் இந்த உதவி பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களில் பெரும்பாலானவை இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக அத்தியாவசிய உணவு, மருந்துப் பொருட்கள் இந்தியாவிலிருந்து வருகின்றன. எனவே, இந்த கடன் உதவித் திட்டத்தினூடாக உண்மையில் இலங்கைக்கு பொருத்தமற்ற அல்லது ஏற்புடையதற்ற கொள்வனவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை இருக்காது.

தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கம்

தெற்காசிய பிராந்தியத்தில் பொருளாதார ரீதியில் வலுப்பெற்ற நாடாக இந்தியா திகழ்கின்றது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. குறிப்பாக கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக உலக நாடுகள் வரிசையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட, அதிகளவு உயிரிழப்புகள் பதிவாகியிருந்த, பெருமளவு பொது முடக்கத்துக்கு நீண்ட காலப்பகுதிக்கு முகங்கொடுத்த நாடுகள் வரிசையில் இந்தியா முன்னிலையில் திகழ்ந்த போதிலும், இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு, வெளிநாட்டுக் கொள்கை போன்றன உறுதியான நிலையில் பேணப்பட்டிருந்தன.

இந்தியாவினால் அண்மைக் காலத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகள்

கடந்த சில மாதங்களாக இலங்கை அந்நியச் செலாவணி இருப்பு தொடர்பான நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், சார்க் வசதியின் கீழ் இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், நாணய கைமாற்று அடிப்படையில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்கியிருந்தது. ஏசியன் கிளியரிங் யூனியன் காரணமாக 515 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவையும் மீளப் பெறுவதை ஒத்தி வைத்திருந்தது.

இந்திய சுற்றுலாப் பயணிகளை கவரத் திட்டம்

இலங்கையில் காணப்படும் இராமாயண கால தொல் பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பிரச்சாரப்படுத்துவது, குஜராத் அடங்கலாக இந்தியாவில் பௌத்தர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இலங்கை பற்றிய பிரச்சாரங்களை மேம்படுத்தி, இலங்கைக்கு இந்தியாவிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. 2009 ஆம் ஆண்டில் இலங்கை மற்றும் குஜராத் மாநிலத்துக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை பின்பற்றி இந்த பிரச்சாரப் பணிகளை இந்தியா முழுவதிலும் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேதன உரப் பயன்பாடு பற்றியும் பேச்சு

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு பல தரப்பினர் மத்தியிலும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்த சேதன விவசாய முறை தொடர்பிலும் இலங்கை நிதி அமைச்சருக்கும் இந்தியப் பிரதமருக்குமிடையிலான உரையாடலின் போது பேசப்பட்டிருந்தது. இதன் போது, சேதன உரப் பயன்பாட்டின் அனுகூலங்கள் பற்றி இந்தியப் பிரதமர் குறிப்பிட்டிருந்ததுடன், அதற்கான நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகள் போன்றவற்றில் இந்தியா கொண்டுள்ள அனுபவம் பற்றியும் விளக்கமளித்திருந்தார். இதில் இலங்கைக்கு பொருத்தமானதாக அமையக்கூடிய நெனோ-உரங்கள் பற்றியும் பேசப்பட்டிருந்தது.

மீனவர் பிரச்சனை

நீண்ட காலமாக நிலவும் கடல் எல்லை மீனவப் பிரச்சனை தொடர்பிலும் இந்தியப் பிரதமர் மற்றும் இலங்கை நிதி அமைச்சர் ஆகியோர் கலந்துரையாடியிருந்தனர். குறிப்பாக கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களை மனித நேயத்துடன் நடத்துவது, அவர்களின் வாழ்வாதாரம், கடல் வளம் மற்றும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவில் விடுவிப்பது தொடர்பிலும் பேசப்பட்டிருந்தது. இந்த சிக்கல் நிறைந்த பிரச்சனை தொடர்பில் அவசரமாக நீண்ட காலத் தீர்வொன்றை காண வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் இரு தரப்பினரும் பேசியிருந்தனர்.

“இலங்கையின் நட்புறவான மக்களுக்கு தொடர்ந்தும் கைகொடுப்போம்”

இந்நிலையில் இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி வழங்கியமை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இலங்கையின் நட்புறவான மக்களுக்கு தொடர்ந்தும் கைகொடுப்போம்” என குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையான நண்பனை ஆபத்தில் அறியலாம் என்பதற்கு ஒரு உதாரணமாக இந்தியாவினால் இந்த 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதை குறிப்பிட முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X