2025 மே 19, திங்கட்கிழமை

கொவிட்-19 வங்கித் துறையில் ஏற்படுத்தப் போகும் தாக்கம்

ச. சந்திரசேகர்   / 2020 மே 18 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொவிட்-19 பரவும் காலம், நிதித்துறைக்குக் கடினமான பரீட்சைக் காலமாகும். நடப்பு நிதியாண்டின் இரண்டாம், மூன்றாம் காலாண்டுகளில், சந்தைத் தளம்பல்கள் காரணமாகப் பொருளாதாரத்தில் பெரும் அழுத்தங்கள் தோன்றும்.

வளர்ச்சிக்குப் போதியளவு வாய்ப்பின்மை, கடன் மீளச் செலுத்தலுக்கான காலச் சலுகை போன்றன, வங்கிகளின் கடன் வழங்கல் விரிவாக்கச் செயற்பாடுகளை மந்தமடையச் செய்யும். 
தொழிற்படா கடன்கள், 2020இல் தசாப்த காலப்பகுதியில் பதிவாகும், அதியுயர் தொகையை எய்தும்.

வங்கித்துறைசார் பங்குகளின் கொள்வனவு என்பதிலிருந்து, தக்க வைத்திருப்பு எனும் நிலைக்கு ஃபர்ஸ்ட் கெப்பிடல் ரிசேர்ச் தரக்குறைப்பு.

உலகளாவிய ரீதியில், கொவிட்-19 தொற்றுப் பரவ ஆரம்பித்த நிலையில், இலங்கையில் மார்ச் மாதம் நடுப்பகுதி முதல், ஊரடங்கு நிலை அமல்படுத்தப்பட்டு, வியாபாரச் செயற்பாடுகளை வீட்டிலிருந்து மேற்கொள்ளுமாறு, அரசாங்கம் பணித்திருந்தது.

இதனால், வர்த்தகச் செயற்பாடுகள் பல முடங்கிக் காணப்பட்ட நிலையில், மே மாதம் 11ஆம் திகதி முதல், படிப்படியாக வாழ்க்கை முறையை வழமைக்குக் கொண்டு வரும் செயற்பாடுகள் மீளத் தொடங்கியுள்ளன. 

இந்த முடக்க நிலை, அமலில் இருந்த காலப்பகுதியில், வியாபாரங்கள் எதிர்நோக்கியிருந்த சவால்களைக் கவனத்தில் கொண்டு, அவற்றுக்கும் தனிநபர்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்குமாறு அரசாங்கம், இலங்கை மத்திய வங்கியூடாக, நாட்டின் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்குப் பணித்திருந்தது. 

குறிப்பாக, சகல வகையான கடன் பெறுகைகளை மீளச் செலுத்தும் காலம், தனிநபர்களுக்கு மூன்று மாதங்களாகவும் வியாபார நிறுவனங்களுக்கு ஆறு மாதங்களாகவும் சலுகைக்காலம் வழங்குமாறு, நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களிடம் கோரப்பட்டிருந்தது. நாட்டின், பொருளாதாரத்தைப் பாரியளவு வீழ்ச்சியடைந்துவிடாமல், ஓரளவுக்கேனும் மீட்டெடுக்கக்கூடிய நிலையில் பேணும் வகையில், இந்த நடவடிக்கை, அரச தரப்பால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

வியாபாரத்துறையில், கடன் மீளச் செலுத்துவதற்கான கால அவகாசம், குறிப்பிட்ட துறைகளுக்கு வழங்கப்பட்டிருந்தன. இதில் சிறிய, நடுத்தரளவு வியாபாரங்கள், வாசனைத் திரவியங்கள் உற்பத்தி, நிர்மாணத்துறை, பிரயாணம், தேயிலை உற்பத்தித் துறை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், ஆடை உற்பத்தித் துறை போன்றன அடங்குகின்றன. இந்தத் துறைகள், நாட்டின் பொருளாதாரத்தில், முக்கிய பங்களிப்பு வழங்கும் துறைகளாக அமைந்துள்ளன. 

கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில், வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டு, வரிச் சலுகைகள் வழங்கப்பட்டு, வியாபாரச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு, உகந்த சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தமை காரணமாக, வியாபார நடவடிக்கைகள் மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 

ஆனாலும், மார்ச் மாதம் முதல் பரவி வரும் கொவிட்-19 காரணமாக, இந்த வளர்ச்சி ஸ்தம்பித்து, வழங்கப்பட்ட கடன்கள் தொழிற்படா நிலையில் பேண வேண்டிய சூழலுக்கு முகங்கொடுக்க வங்கிகளுக்கு நேர்ந்துள்ளது.

இந்நிலையில், வங்கிகள் அடங்கலாக நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், தமது எதிர்கால வருமானத்தையும், பணப் பாய்ச்சல்களையும் திட்டமிடும் போது, வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்த கடன்கள், மீளச் செலுத்தப்படுவதைக் கவனத்தில் கொண்டு எதிர்வுகூறுகின்றன. 

இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த மூன்று மாத காலம், ஆறு மாத காலம் ஆகிய கடன் மீளச் செலுத்தும் சலுகைக் காலங்கள் என்பவை, இந்த நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் இரண்டாம், மூன்றாம் காலாண்டு வருமானத்திலும் இலாபத்திலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன், இக்காலப் பகுதிகளுக்கான நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் தொழிற்படா கடன்களின் அளவு, பெருமளவு அதிகரித்தும் காணப்படும்.

இந்நிலையில், உள்நாட்டில் காணப்படும் நிதி நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில், இலங்கை மத்திய வங்கியால் திரள்வு நிலை அறிமுகம் செய்யப்பட்டு இருந்ததையும் அவதானிக்க முடிந்தது. உலக நாடுகளில், இந்த நிலையை அவதானிக்க முடிந்தது. 

மேலும், நாட்டின் நாணயப் பெறுமதி வலுவிழந்து செல்வதைத் தடுக்கும் வகையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. இவற்றில் இறக்குமதி கட்டுப்பாடுகள், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளைக் கட்டுப்படுத்தல், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணங்களை இடை நிறுத்துதல், பணத்தை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்வதை இடை நிறுத்தல் போன்ற செயற்பாடுகளை அமல்படுத்தியிருந்தது.

இலங்கையின் பிரதான ஏற்றுமதிச் சந்தைகளாகக் கருதப்படும் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களில் கொவிட்-19 தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணத்தால், இப்பிராந்தியங்களிலிருந்து வெளிநாட்டு வருமானத்தைப் பெற்றுத்தரும் துறைகளான இறப்பர், தேயிலை, சுற்றுலாத் துறை, ஆடை உற்பத்தித் துறை போன்றன, பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளன.

குறிப்பாக, சந்தை விநியோகம் தடைப்படுவதால், சந்தைகளில் ஏற்படும் தாக்கங்கள் அதிகரித்து, அதனால் உற்பத்தி வீழ்ச்சியடைந்து, அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் பணியிழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதால், அவர்களுக்கு உளவியல்சார் பிரச்சினைகள் எழக்கூடும் என னுநடழவைவந இனால் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெக்கென்சி முதலீடுகள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின் பிரகாரம், உள்நாட்டு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தாக்கங்கள், கால அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் நிதிச்சேவைகள் துறை, நடுத்தர அளவு காலப்பகுதிக்குரிய தாக்கத்தை எதிர்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வியாபாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை, வியாபாரச் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளமை போன்ற காரணிகளால் நிதிச் சேவைகளை வழங்கும் துறை, இந்த நடுத்தர அளவு காலப்பகுதிக்குரிய தாக்கத்தை எதிர்கொள்ளும்.

இந்நிலையில், வங்கிகளின் நிலைபேறாண்மையை உறுதி செய்யும் வகையில், ஒழுங்குவிதி முறைகளில் சில தளர்வுகளை அரசாங்கம் ஏற்படுத்தி இருந்ததது. இந்த செயற்பாடுகளினூடாக, வங்கிக்கட்டமைப்புக்குள் திரள்வு நிலையை ஈட்டிக் கொள்வது, நிவாரணச் செயற்பாடுகளின் காரணமாக, தொழிற்படா கடன்களின் எண்ணிக்கையில் குறுங்கால அடிப்படையில், பெருமளவு அதிகரிப்பு பதிவாகியிருந்தமை போன்ற, சாதகமான விடயங்களாக அமைந்திருந்தன. இருந்தபோதிலும், வலுவிழந்த பொருளாதார வளர்ச்சி காரணமாக, கடன் பெறும் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக, வட்டி வருமானம் வீழ்ச்சி, குறைந்தளவு வட்டி வீதங்களால் தேறிய வட்டி எல்லைப் பெறுமதிகளில் வீழ்ச்சி, குறைந்த வர்த்தகச் செயற்பாடுகளால் வட்டி மற்றும் வருமானம் வீழ்ச்சி, பொருளாதார நெருக்கடியால் வலுக்குறைப்பு அதிகரிப்பு, கடன் மீளச் செலுத்தும் சலுகைக் காலம் காரணமாகத் திரள்வு நெருக்கடி ஆகியன தோன்றும்.

இவ்வாறான காரணிகளால், கடந்த இரண்டு தசாப்த காலங்களில் முதன் முறையாக, இலங்கையின் வங்கித் துறையின் இலாபகரத் தன்மை, தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக வீழ்ச்சியடையும் என ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ரிசேர்ச் எதிர்வு கூறியுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X