2025 மே 19, திங்கட்கிழமை

தேயிலை ஏல விற்பனை விலை உயர்வு

Editorial   / 2020 மே 19 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாவைரஸ் தொற்றுப் பரவல் மற்றும் போதியளவு விநியோகமின்மை போன்ற காரணிகளால் வலிந்த கொள்வனவு பதிவாகியிருந்ததை தொடர்ந்து, கொழும்பு தேயிலை ஏல விற்பனையில் இலங்கை தேயிலைக்கு உயர்ந்த பெறுமதி பதிவாகியிருந்தது.

ஏப்ரல் மாதத்துக்கான தேசிய தேயிலை சராசரி பெறுமதி கிலோகிராம் ஒன்றுக்கு ரூ. 689.18 ஆக பதிவாகியிருந்ததுடன், 2017 ஏப்ரல் மாதம் பதிவாகியிருந்த மிகவும் உயர்ந்த பெறுமதியான ரூ. 648.52 ஐ விட உயர்வடைந்து பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதத்தில் பதிவாகிய தேசிய தேயிலை சராசரி பெறுமதி கிலோகிராம் ஒன்றுக்கு ரூ. 595.22 உடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதப் பெறுமதி ரூ. 93.96 ஆல் அதிகரித்திருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதப் பெறுமதி ரூ. 110.95 இனால் அதிகரித்து பதிவாகியிருந்ததாக ஃபோர்ப்ஸ் அன்ட் வோல்கர் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் உலக மசகு எண்ணெய் விலை பெருமளவு வீழ்ச்சியடைந்திருந்ததை தொடர்ந்து, தேயிலை ஏற்றுமதி மசகு எண்ணெய்  தயாரிப்பு நாடுகளுக்கு பெருமளவு மேற்கொள்ளப்படும் நிலையில், தேயிலை வியாபாரத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என கருதிய போதிலும், போதயிளவு விநியோகமின்மை மற்றும் கடுமையான இறக்குமதி கடப்பாடுகள் போன்ற காரணிகளால் நுகர்வோர் மத்தியில் நிலவும் வலிந்த கொள்வனவு காரணமாக அதிகளவு கேள்வி நிலவுகின்றமையின் அனுகூலம் இலங்கைத் தேயிலைக்கு கிடைத்துள்ளது.

“தற்போதைய சூழல், குறுகிய மற்றும் நடுத்தரளவு கால அடிப்படையில் தேயிலைக்கு உயர்ந்த விலையை ஈட்டிக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில், உற்பத்தியாளர்கள் உயர் நியமங்களை எய்த முயற்சி செய்ய வேண்டும் என்பதுடன், மோசமான தரத்திலமைந்த தேயிலையை சந்தைக்கு விநியோகிக்கக்கூடாது. குறிப்பாக ஆபிரிக்க பிராந்தியத்தில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், இந்த சூழலின் அனுகூலத்தை நாம் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என ஃபோர்ப்ஸ் அன்ட் வோல்கர் குறிப்பிட்டுள்ளது.

உயர்நிலை தேயிலை விலை கிலோகிராம் ஒன்றுக்கு ரூ. 638.95 ஆக பதிவாகியிருந்ததுடன், இது முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ. 78.85 அதிகரிப்பு என்பதுடன், மத்திய நில தேயிலை விலை கிலோகிராம் ஒன்றுக்கு ரூ. 612.72 ஆக பதிவாகியிருந்தது. இது முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ. 72.65 அதிகரிப்பாகும்.

இந்நிலையில் தாழ்நில தேயிலையின் விலை ரூ. 739.82 ஆக பதிவாகியிருந்தது. 2017 மே மாதத்தில் பதிவாகியிருந்த ரூ.668.58 எனும் உச்சப் பெறுமதியை கடந்து உயர் பெறுமதி பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ. 114.04 அதிகரிப்பையும் பதிவு செய்திருந்தது.

ஜனவரி – ஏப்ரல் வரையிலான நான்கு மாத கால பெறுமதியை கவனத்தில் கொள்ளும் போது, மொத்த சராசரி பெறுமதி ரூ. 618.17 ஆக பதிவாகியிருந்தது. இது 2019 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியின் சராசரி பெறுமதியுடன் ஒப்பிடுகையில் ரூ. 34.62 அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X