2025 மே 19, திங்கட்கிழமை

வங்கிகளுக்கு ஏராளமான கடன் விண்ணப்பங்கள்

Editorial   / 2020 மே 19 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கியால் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட கடன் மீளச்
செலுத்தும் சலுகைக் காலம், கடன் வசதிகள் தொடர்பில் ஆயிரக் கணக்கான
விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக, இலங்கையின் வங்கிகள் தெரிவித்துள்ளன.

முன்னணி வணிக வங்கியின் முகாமையாளர் ஒருவர் தெரிவிக்கையில்,
''இதுவரையில், தமக்குக் கடன் மீளச் செலுத்தும் சலுகைக் கால வசதியைப்
பெறுவதற்கும், வருடாந்த நான்கு சதவீத வட்டியில், தொழிற்படு மூலதனத்தைத்
திரட்டிக் கொள்வதற்கான கடனைப் பெற்றுக் கொள்வதற்கும் சுமார் 45,000
க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இந்த விண்ணப்பங்கள், சுமார்
10 மில்லியன் ரூபாய் முதல், 25 மில்லியன் ரூபாய் வரையான கோரிக்கைகளைக்
கொண்டுள்ளன. இவற்றை நாம், தற்போது ஆராய்ந்து வருகின்றோம். மின்சாரம்,
நீர், சம்பளச் செலவுகளை ஈடு செய்யும் வகையில், கடன் மீளச் செலுத்தலுக்கான
சலுகைக் காலத்தைக் கோரியுள்ள இந்த விண்ணப்பங்களுக்கு, முன்னுரிமை
வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது'' என்றார்.

''கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்குச்
சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், இந்தச் சலுகைகள்
அறிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, சுய தொழிலில் ஈடுபடுவோர்,
தனிநபர்களுக்குப் பொருந்தும் வகையில் அமைந்துள்ளன. கொவிட்-19 நிலைக்கு
முன்னதாக, நாம் மாதாந்தம் 4,000 கடன் விண்ணப்பங்களைப் பெறுவோம். தற்போது
இது, சுமார் 11 மடங்கு அதிகரித்துள்ளது'' என்றார்.

தொழிற்படு மூலதனம் அல்லது, முதலீட்டு நோக்கத்துக்காகக் கடன் பெற
விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பதாரி வங்கியொன்றுக்கு
தலா 25 மில்லியன் ரூபாய்க்கு அதிகரிக்காத வகையில், நியாயமான வியாபாரத்
திட்டமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். நிதிச் சேவைகளை வழங்கும்
நிறுவனமொன்றுக்கு ரூ. 10 மில்லியன் பெறுமதியை மிஞ்சாத வகையிலமைந்த
வியாபாரத் திட்டத்தை அல்லது, இரண்டு மாதங்களுக்கான தொழிற்படு மூலதனத்தை,
இவற்றில் உயர்வானதைச் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு பெற்றுக்
கொள்ளப்படும் கடன்கள், இரண்டு வருடங்களில் நான்கு சதவீத வட்டியில், மீளச்
செலுத்தப்பட வேண்டும். வங்கிகளுக்கு நான்கு சதவீதம் வரையும், நிதிச்
சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு ஏழு சதவீதம் வரையும், இலங்கை மத்திய
வங்கி நிவாரண அடிப்படையில் வட்டியை வழங்கும். அத்துடன், இலங்கை மத்திய
வங்கியின் முதலீட்டு நோக்குடைய கடன் திட்டம், வங்கியொன்றுக்கு ரூ. 300
மில்லியனை விட, அதிகரிக்காத வகையில் வியாபார விஸ்தரிப்புக்காக
மேற்கொள்ளும் கடன் கோரிக்கைகளுக்கு மாத்திரம் வழங்கப்படும். இந்தக்
கடன்களை ஐந்து வருடங்களுக்குள் மீளச் செலுத்த முடியும்.

''ஆனாலும், பல திருப்தியற்ற வாடிக்கையாளர்கள் காணப்படுகின்றனர்.
மென்பொருள் கட்டமைப்பு வியாபாரத்தை முன்னெடுக்கும் வர்த்தகர் ஒருவரும்,
ஏனைய இருவர் விவசாய பண்ணைத் தொழிலை முன்னெடுப்பவர்களுமாக அமைந்துள்ளனர்.
மென்பொருள் வடிவமைப்பு நிறுவனம் எனும் வகையில், எமது வங்கியுடன் எனது
நிலை தொடர்பில் கலந்துரையாடினேன். 4 சதவீத வட்டியை கோரிய போது,
முகாமையாளர் சொத்தொன்றை ஆதாரமாக வழங்குமாறு பணித்தார்' என்றார்.

விவசாயத்துறைக்கு, தொழிற்படு மூலதனக் கடன்கள் வழங்கக்கூடிய ஒதுக்கங்கள்
இல்லை என, தமது வங்கியின் முகாமையாளர், தமக்குத் தெரிவித்ததாக விவசாய
பண்ணைத் தொழில் முயற்சியாளர் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின்
அறிவித்தலில், இந்தத் துறைக்காகவும் தொழிற்படு மூலதன கடன் வசதியை
வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோன்று, இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தலில், நிதிச் சேவைகளைப்
பெற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள், காசோலைகளின் மீதான மேலதிகப் பற்று (OD)
வசதியை, ஏப்ரல் 30ஆம் திகதி வரை வழங்குமாறு கோரியிருந்தது.
இருந்த போதிலும், சொத்துகள் அடிப்படையிலான மேலதிக பற்று (OD)க்கு
மாத்திரம், இந்தச் சலுகை வழங்கப்படக்கூடியது எனவும், பண-எல்லை
அடிப்படையிலான மேலதிகப் பற்று (OD) வசதிக்கு பொருந்தாது என, தமது
வங்கியின் முகாமையாளர் தெரிவித்ததாகத் தகவல் தொழில்நுட்பத்துறையைச்
சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.

வங்கிச் சேவைகளை வழங்குபவர் எனும் வகையில், ''இடர் பொறுப்பை வங்கிகள்
ஏற்க வேண்டும். வங்கிக்கான கொடுப்பனவை வாடிக்கையாளர் செலுத்தாவிடினும்,
இலங்கை மத்திய வங்கிக்கு மேற்கொள்ள வேண்டிய கொடுப்பனவை வங்கி மேற்கொள்ள
வேண்டும். வாடிக்கையாளரின் வியாபாரம், மென்பொருள் வடிவமைப்பாக
அமைந்திருந்த போதிலும், விண்ணப்பதாரிக்கு வியாபாரத் திட்டமொன்றைச்
சமர்ப்பிக்க முடியாத நிலை காணப்பட்டாலும், சம்பளக் கொடுப்பனவுக்காக
எம்மால் கடன் வழங்க முடியாது'' என்றார்.

சுற்றுலாத் துறையிலும் ஹோட்டல்களுக்கான கடன்கள் கிடைக்கப்பெறவில்லை
என்பதுடன், ஏப்ரல் மாத சம்பளக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதில் ஹோட்டல்
நிர்வாகங்கள் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடன் வழங்கல் தொடர்பான அறிவித்தல் தெளிவற்றதாக அமைந்துள்ளது. அனைத்துத்
தரப்பினருக்கும் அனுகூலமான வகையில், இந்த அறிவித்தல் மேலும்
தெளிவுபடுத்தப்பட்டிருப்பது முக்கியமானதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X