2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் வரிக்கு முன்னரான இலாபம் ரூ.1,319 மில்லியன்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 15 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் வரிக்கு முன்னரான இலாபமாக ரூ.1,319 இனை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த இலாபப் பெறுமதி 11 வீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுப்பகுதியில் குழுமத்தின் வரிக்கு முந்திய இலாபம் ரூ.311 மில்லியனாக பதிவாகியிருந்தது. தாய் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய குழுமத்தின் இலாபம் 2 வீதத்தினால் நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியினுள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2012/13 நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 35.02 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த பெறுமதியான 24.51 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் 43 வீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. காலாண்டுக்கான மொத்த வருமானம் 11.98 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. இது கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பதிவாகியிருந்த 7.44 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் 61 வீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹனீப் யூசுப் கருத்து வெளியிடுகையில், 'முதல் ஒன்பது மாதங்களிலும் குழுமத்தின் நிதிச் செயற்பாடுகள் பெருமளவு சவால்களை எதிர்நோக்கியிருந்தது. விசேடமாக ஐரோப்பிய நாடுகளில் நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் புதிய முதலீடுகளில் ஏற்பட்ட தாமதங்கள் போன்றன இந்த சவால்களுக்கு முக்கிய காரணங்களாக அமைந்திருந்தன. புதிய முதலீடுகள் மத்திய அளவு கால போக்கில் நிதிச் செயற்பாடுகளில் பங்களிப்பை வழங்கும் என நாம் எதிர்பார்க்கிறோம்' என்றார்.

சரக்குகள் போக்குவரத்து மற்றும் உபகரண வழங்கல் துறையின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 63 வீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இதற்கு பிரதான காரணமாக சரக்குகள் போக்குவரத்துக்கான கட்டணங்கள் அதிகரித்திருந்தமை அமைந்திருந்தது. இந்த துறையின் மூன்றாம் காலாண்டுக்கான வரிக்கு முன்னரான இலாபம் 326 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் மொத்த பெறுமதியாக 1,094 மில்லியன் ரூபா பதிவாகியிருந்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 வீத அதிகரிப்பாகும். மூன்றாம் காலாண்டு பெறுமதியை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 வீத அதிகரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஐரோப்பிய சந்தைகளில் சவால்கள் நிறைந்த சூழ்நிலை காணப்பட்ட போதிலும், சரக்கு போக்குவரத்து துறையில் போதியளவு வளர்ச்சி எய்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு நிறுவனங்களுடனான சரக்கு போக்குவரத்துக்காக மேற்கொள்ளப்பட்ட புதிய உடன்படிக்கைகளின் மூலம் இந்த துறையின் வளர்ச்சிக்கு பெருமளவு செல்வாக்கு செலுத்தப்பட்டிருந்தது. இந்த புதிய உடன்படிக்கைகளின் மூலம் இந்த துறையின் வளர்ச்சி எதிர்காலத்தில் மத்திய அளவில் நிதிசார் மற்றும் கொள்கைசார் அனுகூலங்களை வழங்கும்.

களஞ்சியசாலை நிர்மாணப்பணிகள் தற்போது நிறைவை எய்தியவண்ணமுள்ளது. ஆயினும் இந்த செயற்பாடானது முதலில் நிறுவனத்தின் செலவீனத்தில் உள்ளடங்கியிருந்தாலும், நீண்ட கால நோக்கில் அனுகூலங்களை வழங்கக்கூடியதாக அமைந்திருக்கும். அத்துடன், எக்ஸ்போ ஃபிரயிட் (EFL) நிறுவனத்தின் சகல உபகரண வழங்கல் சந்தைகளிலும் ஆதிக்கத்தை செலுத்தும் வாய்ப்பையும் ஏற்படுத்தும். சர்வதேச பொருளாதார சூழ்நிலைக்கமைய, (EFL) நிறுவனத்தின் நோக்கமானது, தொடர்ச்சியாக தனது நிலையை முன்னெடுத்துச்சென்று. சந்தைவாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வதாக அமைந்துள்ளது.

பயணங்கள் மற்றும் விடுமுறைகால வசதிகள் துறையானது நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் வரிக்கு முன்னரான இலாபமாக 83 மில்லியன் ரூபாவை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 105 வீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மொத்த வருமானமும் நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் 287 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சியில் பிரதான பங்களிப்பை அக்குவாசன் நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக செயற்பாட்டு சிக்கனங்களை கடைப்பிடித்து அதிகளவு வளர்ச்சியை பதிவு செய்வது இந்த துறையின் நோக்கமாக அமைந்துள்ளது.

சர்வதேச வியாபாரம் மற்றும் உற்பத்தித்துறை போன்றன தமது பிரதான ஏற்றுமதி நாடுகளில் நிலவும் சவால்கள் நிறைந்த பொருளாதார நிலைமைகளிலும், உறுதியான வருமானத்தை பதிவு செய்திருந்தன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் மொத்த வருமானம் 5 வீதத்தினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முதல் ஒன்பது மாத காலப்பகுதிக்கான வரிக்கு முன்னரான இலாபம் 90 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.

தேயிலை துறை சவால்கள் நிறைந்த துறையாக அமைந்திருந்த போதிலும், நேர்த்தியான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தது. இந்த துறையில் கடந்த ஆண்டில் நிலவிய கடும் வரட்சியான காலநிலை காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது. நிறுவனம் தற்போது இலாபத்தை அதிகரித்துக்கொள்ளும் வகையில் வர்த்தகத்தில் பிரதானமற்ற பிரிவுகளை இனங்காணும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதலீடுகள் மற்றும் சேவைகள் துறை, நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலண்டில் வரிக்கு முன்னரான இலாபமாக 9.5 மில்லியன் ரூபாவை பதிவு செய்திருந்தது. முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் 51 மில்லியன் ரூபாவை பதிவு செய்திருந்தது. இந்த பெறுமதிகள் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் முறையே 157 வீத மற்றும் 121 வீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துறையின் வளர்ச்சியில் GSA விமானசேவை நேர்த்தியான பங்களிப்பை வழங்கியிருந்தது. கூட்டாண்மை தொடர்பாடல் பிரிவை மேம்படுத்தும் வகையில் நிர்வாக செலவீனம் அதிகரித்திருந்த போதிலும், குழுமத்தின் செயற்பாடுகளுக்கமைய இது அவசியமான தேவை என உணரப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .