2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

செலான் வங்கியின் பட்டியலிடப்பட்ட கடன் பத்திர வழங்கல்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 12 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


செலான் வங்கி பி.எல்.சி. நிறுவனமானது ரூபா 1 பில்லியனை திரட்டிக்கொள்ளும் பொருட்டு, ஒவ்வொன்றும் ரூபா 100 பெறுமதியானதும் ஐந்து வருடங்களுக்கானதுமான பிணையற்ற (Unsecured), பிரதியீடான (Subordinated), மீட்கக்கூடிய (Redeemable) 10,000,000 தொகுதிக் கடன் பத்திர வழங்கலை மேற்கொள்வதற்கான அனுமதியை கொழும்பு பங்குச் சந்தை (CSE) இடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளது. அத்துடன், மிகையாக வழங்கல் கோரப்படுமிடத்து மேலும் ரூபா 1 பில்லியனுக்கான கடன் பத்திரங்களை வழங்குவதன் மூலம் மொத்த வழங்கலை ரூபா 2 பில்லியனாக அதிகரித்து கொள்வதற்கான அங்கீகாரத்தையும் வங்கி பெற்றுள்ளது. இத்தொகுதிக்கடன் பத்திர வழங்கல் 2013 பெப்ரவரி 14ஆம் திகதி ஆரம்பமாகும்.

உத்தேச கடன் பத்திர வழங்கலானது 3 வகையான கடன்பத்திரங்களை உள்ளடக்கியுள்ளது. அதன்பிரகாரம், நிலையான வட்டி வீதம் - வருடாந்த அடிப்படையில் அல்லது அரையாண்டு அடிப்படையில் அல்லது மாதாந்த அடிப்படையில் கொடுப்பனவு செய்யப்படும். வட்டித் தொகை வருடாந்த அடிப்படையில் வழங்கப்படும் போது 15.50 சதவீத வட்டியையும், வட்டிக் கொடுப்பனவு அரையாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுமாயின் 15.00 சதவீத வட்டியையும் (வருடாந்த விளைவு வீதம் AER- 15.56%), அதேநேரம் வட்டிக் கொடுப்பனவு மாதாந்த அடிப்படையில் வழங்கப்படும் பட்சத்தில் 14.50% (வருடாந்த விளைவு வீதம் AER- 15.50%) வட்டி வருமானத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

ஆகக் குறைந்த முதலீடாக ஓவ்வொன்றும் ரூபா 100 பெறுமதியான 1இ000 கடன் பத்திரங்கள் (ரூபா 100,000) ஆக இருக்கும். அதன்பின்னர் ஒவ்வொன்றும் 100 பெறுமதியான 100 தொகுதிக் கடன் பத்திரங்களின் (ரூபா 10,000) மடங்குகளாக முதலீடு அமைந்திருக்க வேண்டும்.

2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்படி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் சாதகத் தன்மையைப் பயன்படுத்தி முதன்முதலாக வழங்கப்படுகின்ற கடன் பத்திரங்களில் ஒன்றாக செலான் வங்கியின் இவ்வழங்கலும் காணப்படும். இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளின் பிரகாரம், 01.01.2013 இற்குப் பின்னர் விநியோகிக்கப்படும் பட்டியலிடப்பட்ட கூட்டாண்மை பிணையங்களுக்கு (கடன் பத்திரங்களுக்கு) 'நிறுத்திவைத்தல் வரி' (WHT) மற்றும் வருமான வரி ஆகியவற்றிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த கடன் பத்திர வழங்கல் தொடர்பாக தற்போது பிரமாண்டமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட கடன் வளர்ச்சி இலக்குகளை அடைந்துகொள்ளும் எதிர்பார்ப்பின் அடிப்படையில,; ஆரோக்கியமான மூலதன தகுதி வீதத்தை பேணிக்கொள்ளும் பொருட்டு மூலதன தளத்தை விரிவுபடுத்துவதற்கு இத் தொகுதிக்கடன் பத்திர வழங்கல் செலான் வங்கிக்கு உதவி புரியும். அத்துடன் வங்கியின் Tier - 2 மூலதனத் தளத்தை பரந்துபட்டதாக மேம்படுத்திக் கொள்வதற்கும் உதவியாக அமையும். அதுமாத்திரமன்றி செலான் வங்கியின் நடுத்தர கால கடன் வழங்கலுக்கு இணையாக, நடுத்தர கால நிதியிடல் தளத்தை அதிகரிப்பதற்கும் உதவும். அதேவேளை, அடுத்துவரும் ஐந்து வருட காலப்பகுதியில் ஒரு கிரமமான நிலையான வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கு மிகச்சிறந்த வாய்ப்பொன்றையும் முதலீட்டாளர்களுக்கு இந்த கடன் பத்திர வழங்கல் அளிக்கின்றது.

2012 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த 9 மாத காலப்பகுதியில் செலான் வங்கியானது பெறுமதி சேர் வரி (வற்) மற்றும் வருமான வரி ஆகியவற்றுக்கு முன்னரான வருமானமாக ரூபா 3,130 மில்லியனைப் பெற்றுக் கொண்டதன் மூலம் 3ஆம் காலாண்டில் மிகச் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவுசெய்துள்ளது. முன்னைய வருடத்தின் முதல் 9 மாதங்களிலும் பெறுமதிசேர் வரி மற்றும் வருமான வரிக்கு முன்னரான (அசாதாரணமாக ஏற்பட்ட (VRS) தன்னார்வ ஓய்வுபெறல் செலவுகளுக்கு முந்திய) இலாபமாக ரூபா 1,424 மில்லியனைப் பெற்றிருந்த நிலையில், இவ்வருடத்தின் அதே காலப்பகுதியில் அத்தொகை ரூபா 3,130 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதன்மூலம், கடந்த வருடத்தின் தொடர்புபட்ட காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 120% அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் 9 மாத காலப்பகுதிக்கான வரிக்குப் பின்னரான இலாபம் ரூபா 303 மில்லியனாக பதிவுசெய்யபட்டிருந்த நிலையில், இவ்வருடத்தில் ரூபா 1,604 மில்லியனாக அதிகரித்துள்ளது.

செலான் வங்கியின் கடன் பத்திர வழங்கல், கெனன்கா இன்வெஸ்ட்மன்ட் கோப்பரேஷன் லிமிட்டெட் (Kenanga Investment Corporation Ltd.) நிறுவனத்தினால் முகாமைத்துவம் செய்யப்படும். இவ் வழங்கலுக்கான பதிவாளராக பி.டபள்யூ. கோப்பரேற் செக்ரட்டேரியல் (பிரைவேட்) லிமிட்டெட் (P W Corporate Secretarial Pvt. Ltd) நிறுவனம் செயற்படும் அதேவேளை இதன் பொறுப்பாளராக டொயிச் பேன்க் ஏ.ஜி., (Deutsche Bank AG) தொழிற்படும். இந்த கடன் பத்திர வழங்கலுக்கான வங்கியியலாளராக செலான் வங்கி திகழும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .