2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் தொகுதிக் கடன் பத்திரங்கள் மிகை விநியோகம்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் ஒவ்வொன்றும் ரூபா 100 பெறுமதியான தொகுதிக் கடன் பத்திர வழங்கலானது மிகை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருந்த 2,500,000 தொகுதிக்கடன் பத்திரங்களுக்கான இவ் வழங்கல் 2013 ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமானது. மொத்தப் பெறுமதி ரூபா 500 மில்லியனாகும் விதத்தில் மேலும் 2,500,000 தொகுதிக்கடன் பத்திரங்களை வழங்குவதற்கான விருப்பத் தெரிவையும் இந்த வழங்கல் கொண்டிருந்தது.

கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷான் எகொடகே இது குறித்து கூறுகையில், 'இந்த கடன் பத்திர வழங்கலின் சிறப்பான செயற்பாடு தொடர்பில் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். அதேநேரம், இலங்கைப் பொதுமக்களும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையின் புலம்பெயர் சமூகமும் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின்; மீது வைத்துள்ள நம்பிக்கைக்காக அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். மேலும் அதிகமான மக்களைச் சென்றடைவதற்காக நாம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற முன்முயற்சிகளில் ஒரு அங்கமாக பங்கெடுப்பதற்கான தனிச் சிறப்புமிக்க வாய்ப்பினை முதலீட்டாளர்களுக்கு இந்த தொகுதிக் கடன் பத்திர வழங்கல் அளிக்கின்றது. இதன் காரணமாக அவர்களது வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும்' என்று தெரிவித்தார்.

பிணையற்ற (Unsecured), பிரதியீடான (Subordinated), மீட்கக்கூடிய (Redeemable) விதத்திலமைந்த ஐந்து வருடங்களுக்கான இத்தொகுதிக் கடன் பத்திரங்கள் கொழும்பு பங்குச் சந்தையின் இரண்டாம்நிலை தளத்தில் பட்டியலிடப்படுவதுடன், காலாண்டு அடிப்படையில் 20% வட்டித் தொகை செலுத்தப்படும். இத் தொகுதிக் கடன் பத்திரங்கள் 21.55% வருடாந்த விளைவு வீதத்தை வருமானமாக உழைத்துத் தரும். அண்மைக்காலத்தில் வரி விதிப்பு நடைமுறையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் பயனாக, இந்த தொகுதிக் கடன் பத்திரங்கள் மீதான வட்டி வருமானத்திற்கு வருமான வரியிலிருந்து விலக்களிப்பு செய்யப்படும். அதன் காரணமாக 'நிறுத்திவைத்தல் வரி' (WHT) கழிக்கப்படமாட்டாது.

தொகுதிக்கடன் பத்திர வழங்கலின் வங்கியியலாளராக ஹற்றன் நஷனல் வங்கி பி.எல்.சி. (Hatton National Bank PLC) திகழ்வதுடன், இவ் வழங்கலின் முகாமையாளராகவும் பதிவாளராகவும் மேர்ச்சன்ற் பேன்க் ஒஃப் ஸ்ரீ லங்கா (Merchant Bank of Sri Lanka) திகழ்கின்றது. அதேவேளை தொகுதிக்கடன் வழங்கலின் பொருளாளராக டொயிச் பேன்க் ஏ.ஜி., கொழும்புக் கிளையானது (Deutsche Bank AG, Colombo Branch) செயற்படுகின்றது. RAM ரேட்டிங் லங்கா லிமிட்டெட் இந்த தொகுதிக்கடன் பத்திரங்களுக்கு 'BB' எனும் நீண்டகால தரப்படுத்தலை அளித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .