2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மாஓய ஆற்றுநீர் வடிகால் அமைப்பு திட்டத்திற்கு ஆதரவளித்த ஜனசக்தி

A.P.Mathan   / 2013 மே 09 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் தூய்மையான நீர்வளத்தை பாதுகாக்கும் நோக்கில், லங்கா ஜலனி அமைப்பின் மூலம் முன்னெடுக்கப்படும் மா ஓய ஆற்றுநீர் வடிகால் அமைப்பு திட்டத்திற்கு ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் நிதியுதவிகளை வழங்கியுள்ளது. இந் நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வாக மா ஓய நீர்வரம்பு பிரதேசங்களான ராஹல, அரனாயக்க பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
 
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனசக்தி காப்புறுதியின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளரான செஹாரா டி சில்வா, 'எமது தேசத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் செயற்பாட்டினை சிறுவர்களிடமிருந்து தொடங்கி கூட்டு நிறுவனங்களிடையே முன்னெடுக்கவுள்ளதுடன், இந் நிலைமை குறித்து அரசாங்கமும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். இதன் காரணமாகவே பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் ரீதியில், நீர் முகாமைத்துவத்திற்கு அவசியமான ஆராய்ச்சி, தீர்வுகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை வழங்கக்கூடிய மாஓய ஆற்றுநீர் வடிகாலமைப்பு திட்டத்தினை முன்னெடுக்கும் லங்கா ஜலனி அமைப்புடன் இணைந்துள்ளோம். இந் நிலைமை தொடர்பாக ஆழமான புரிந்துணர்வை கொண்டுள்ள லங்கா ஜலனியுடன் கைகோர்த்துள்ளமை குறித்து பெருமையடைகிறோம். இலங்கை நீர் பங்காண்மையுடன் இணைந்து சிறப்பாக செயலாற்றிய குசும் அதுகோரலவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
 
ராஹல கனிஷ்ட பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். மேலும் இந் நிகழ்வில் இலங்கை நீர் பங்காண்மையின் தலைவர் குசும் அதுகோரல மற்றும் டாக்டர் ரஞ்ஜன மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யு.கே.பிரியதர்ஷன ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந் நிகழ்வில் ராஹல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பாடசாலைகளுக்கு மூலிகை தோட்டங்கள் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதுடன், சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் ஆற்றுநீர் வடிகால் அமைப்பு பாதுகாப்பு திட்டம் குறித்த பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் குறித்து கலந்துரையாடினர். 
 
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த குசும் அதுகோரல, 'இலங்கையில் காணப்படும் விலைமதிப்பற்ற இயற்கை வளங்களுள் நீர் வளமும் ஒன்றாகும். இருப்பினும், குறைவான விழிப்புணர்வுகள் காரணமாக தொடர்ந்தும் நாம் நமது சுற்றுச்சூழலினை அசுத்தப்படுத்தி வருகிறோம். நமது தேசத்தின் நீர் வளத்தை பாதுகாப்பதற்கான அவசியம் அதிகமாக காணப்படுவதுடன், மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், இவ்விடயம் குறித்து தீர்வுகளை எடுப்பதற்கான அவசியமும் காணப்படுகிறது. இவற்றைக் குறிக்கோளாக கொண்டே நாம் மா ஓய ஆற்றுநீர் வடிகாலமைப்பு திட்டத்தை முன்னெடுக்கிறோம். இத்திட்டத்திற்கு ஜனசக்தி நிறுவனம் வழங்கிய ஆதரவு குறித்து பெருமையடைகிறோம்' என்றார்.
 
இந் நிகழ்வினை தொடர்ந்து டாக்டர்.ரன்ஜன, யு.கே.பிரியதாஸ தலைமையிலான கொழும்பு பல்கலைக்கழகத்தின் குழுவினர் அசுத்தம் மற்றும் அதில் பங்களிப்பு செலுத்தும் காரணிகள் குறித்து சரியான அளவில் தீர்மானிக்கும் நோக்கில் மா ஓய ஆற்றுநீர் வடிகாலமைப்பு தர ஆய்வுகளை மேற்கொண்டனர். இறுதியாக ராஹல கிராம மக்களிற்கு மா ஓய ஆற்றங்கரையில் வளர்ப்பதற்கு என பாக்கு மரச்செடிகள் வழங்கப்பட்டன. இப் பாக்கு மரங்கள் நதியின் மண் அரிப்பைத் தடுப்பதுடன், கிராம மக்கள் அப் பாக்குகளை விற்று மேலதிக வருமானத்தையும் ஈட்டிக்கொள்ள முடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .