2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

எஞ்சியுள்ள ஏக்கரையும் விடுவிக்குமாறு போராட்டம்

George   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என். நிபோஜன்

பரவிபாஞ்சானில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் காணிகளையும், இரண்டு வாரத்தில் பெற்றுத் தருவதாக எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய உறுதிமொழி நிறைவேறாத நிலையில், நேற்று முன்தினம் புதன்கிழமை (31) இரவு, மீண்டும் தங்களின் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்த பரவிப்பாஞ்சான் கிராம மக்கள், நேற்று இரண்டாவது நாளாகவும், தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்டிருந்த தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, குறித்த கிராம மக்கள், கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இதனையடுத்து, கடந்த 17ஆம் திகதியன்று அப்பகுதிக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர்  இரா. சம்பந்தன், பாதுகாப்புச் செயலாளருடன் அலைபேசியில் தொடர்புகளை ஏற்படுத்தி, இம்மக்களின் பிரச்சினை தொடர்பாகப் பேசியதை அடுத்து, இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.

இதனையடுத்து, ஐந்து நாட்களாக தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள், தமது போராட்டத்தைக் கைவிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் வாக்குறுதியளித்தவாறு 14 நாட்கள் கால வரையறை,  புதன்கிழமையுடன்  நிறைவடைந்த நிலையில், பரவிபாஞ்சானில் சுமார் மூன்றரை ஏக்கர் காணி மட்டுமே விடுவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளாத பரவிபாஞ்சான் மக்கள், தங்களுடைய அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி, மீண்டும் தங்களுடைய கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

'15 குடும்பங்களுக்கு சொந்தமான இன்னும் பத்து ஏக்கர் காணி விடுவிக்கப்படல் வேண்டும். அந்தக் காணிகளும் விடுவிக்கப்படும் வரை, தொடர் கவனயீர்ப்;பு போராட்டத்தை நடத்துவோம் அல்லது வடமாகாண ஆளுநர், மீள்குடியேற்ற அமைச்சர் வந்து எமக்கு வாக்குறுதி தரவேண்டும். அவ்வாறு தந்தாலே போராட்டம் கைவிடப்படும்' என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .