2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'உப்பளங்களை தனியார்மயப்படுத்த வேண்டாம்'

Menaka Mookandi   / 2016 நவம்பர் 20 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“வடமாகாணத்தில் இயங்கிவரும் உப்பளங்களைத் தனியார்மயப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம், வரலாற்றும் தவறாகும். இந்நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த, கட்சி வேறுபாடின்றி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என, வடமாகாண மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களிடம், மாந்தை உப்பள ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார்மயப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மன்னார், ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்கள் தொடர்பில், அவ்வூழியர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வட பகுதியில் உள்ள உப்பளங்கள் அனைத்தையும் தனியார் உடமையாக்குவதற்கான ஆலோசனை, நிதி அமைச்சரினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தின் போது முன்மொழியப்பட்டது.

நான்கு தசாப்தங்களாக உற்பத்தி மௌனிக்கப்பட்டிருந்த வடமாகாணத்தின் உப்பளங்கள், தற்போது மீண்டும் அபிவிருத்திக்கு உட்படுத்தப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பினை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக மாறியுள்ளன.

இந்நிலையில், இவ்வுப்பளங்களை விற்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையை, போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தினையும் ஏழை மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தினையும், நீண்டகால  திட்டமிடலின் ஊடாக இல்லாதொழிக்கும் நடவடிக்கையாகவே நாம் கருதுகின்றோம்.

இது, தனியார் ஒருவரின் கைக்கு செல்லுமானால், வருடா வருடம் இதன்மூலம் ஈட்டப்படுகின்ற வருமானம், தனியொரு முதலாளியினையே சென்றடையும். இதனை கொள்வனவு செய்பவர், காலப்போக்கில் உப்பளத்தினை மூடிவிட்டு வேறு வருமானம் பெற்றுக்கொள்ளும் வகையில் இக்காணிகளினை பயன்படுத்த முனையலாம். இதனால் நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகும்.

எனவே, இவ்வுப்பளங்களை அபிவிருத்தி செய்து, உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களின் வாழ்வாதார, பொருளாதார வாழ்க்கைத்தரம் மேம்பாடடைவதற்கான வேலைவாய்ப்புகளை வழங்கி, உப்பு உற்பத்தியையும் அதனுடன் இணைந்த உப உற்பத்திகளையும் மேலும் அதிகரிக்கக்கூடிய திட்டங்களை உருவாக்கி, நாட்டின் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்கின்ற வகையில், வடக்கின் உபாயரீதியான உப்பளங்களை அபிவிருத்தி செய்ய, இந்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது, மக்களை நேசிக்கும் தலைவர்களின் தார்மிக கடமையாகும்” என அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .