2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

போருக்கு பிந்திய நிலைமை போர்காலத்தை விட ஆபத்தானது : ஜெயசங்கர்

Super User   / 2014 மார்ச் 23 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


போருக்கு பிந்திய நிலைமை என்பது போர்காலத்தினை விட ஆபத்தானது. போர்காலத்தில் இறந்தவர்களினை விட இன்று தற்கொலையினால் பலர் இறக்கின்றார்கள். தற்கொலை செய்யப்படுவதற்கான காரணம் என்ன என்பது பற்றி சிந்திக்க வேண்டும். இன்று மக்களிடையே  காணப்படுகின்ற கடன் சுமைகள் மக்களை தற்கொலை எண்ணத்திற்கு தூண்டுகின்றது. இவற்றில் இருந்து மக்களை மீட்டெடுக்கவேண்டும் என கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீடாதிபதி சி.ஜெயசங்கர் சனிக்கிழமை (22) தெரிவித்தார்.

யோ.கர்ணன் எழுதிய 'கொலம்பசின் வரைபடங்கள்' என்ற நூலின் அறிமுகவிழாவும், கலந்துரையாடலும் யாழ்ப்பாணம் டேவிட் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைக்கோட்டத்தில் சனிக்கிழமை (22) நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே ஜெயசங்கர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'போர்க்காலத்தில் பல கதைகள் எங்களுக்கு இடம்பெற்றுள்ளது. அக்கதைகள் பற்றி குடும்பங்களாக நாம் கதைக்க வேண்டும். இவ்வாறு நினைவில் கொண்டு வருவது சிறப்பானதாகும். அச்சில் வருகின்ற போது அது அத்துடன் நின்றுவிடும். ஆனால் நினைவில் வருகின்ற போது அது அழியாது. கண்ணுக்கு புலப்படாத அபிவிருத்தி என்கின்ற பயங்கரத்தில் இருந்து நாங்கள் எங்களது அடையாளத்தினை கொண்டுவருவது என்பது பற்றி சிந்திக்கவேண்டும்.

கடந்த 30 வருடங்களாக நடந்த விடயங்கள் எமது ஞாபகத்தில் இல்லாது போகின்றன. இது பற்றி கல்வியாளர்களும் கதைப்பதில்லை. எழுத்தில் மட்டும் கொண்டுவருதல் என்ற குறுகிய வட்டத்தினை தாண்டி கதைப்பதற்கான வழிகள் உருவாக்கப்பட வேண்டும். நினைவுகளினை மீளக் கொண்டு வருவதற்கான சூழ்நிலைகள் இல்லாது போகின்ற போதுதான் தற்கொலை எண்ணங்கள் தலை தூக்குகின்றன. இது பற்றி கதைப்பதற்கான வெளி எமது சூழலில் இல்லை.

இத்தொகுப்பில் (கொலம்பசின் வரைபடங்கள்) உள்ள கதைகள் யாரையும் அழிப்பதற்கல்ல. இந்நூல்கள் எங்களை நாங்களே கேள்வி கேட்பதற்கும் எம்மை நாமே விளங்கி கொள்வதற்குமானவையாகும். பல்கலைக்கழகத்தில் கற்ற காலத்தில் வாசித்த 'புதியதோர் உலகம்', அண்மையில் வந்த 'ஈழத்தின் வலி' போன்ற நூல்களின் வரிசையில் இந்நூல் உள்ளது.

நூலாசிரியர்களுக்கு இந்நூல்களினை ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது என்பதினை இலக்கியங்களிற்கு அப்பால் பார்க்கப்பட வேண்டும். வன்முறை மிக்க சூழலில் மனிதத்தை நோக்குவதற்காக இவை படைக்கப்பட்டன. எங்களிடம் நிறைய ஆவணங்கள் உள்ளன. இப்பின்னணியில் வைத்து எங்களது பிரச்சினைகளினைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சிறுபான்மை தொடர்பில் தேசத்திலுள்ள இனங்களிக்குள் இருக்கின்ற பிரச்சினைகள், ஏனைய நாடுகள் தங்களது நலனிற்காக மேற்கொள்ளப்படுகின்ற விடயங்கள் என்பதை உலகப்பரப்பில் வைத்து நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சர்வதேசம் என்ற விலாசம் இல்லாததைப் பற்றி நாங்கள் கதைக்கின்றோம். எங்களது பிரச்சினைகளினை எவ்வாறு நாங்கள் பார்க்கப் போகின்றோம். எங்களிடம் உள்ள ஆயிரம் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும். 2ஆம் உலக யுத்தத்திலுள்ள கதைகள் எங்களிற்கு தெரியும். ஆனால் எங்களது உயர்தர வகுப்பு மாணவர்களிற்கு எங்களது கதைகள் தெரியாது. இதற்கு காரணம் இலத்திரனியல் சாதனங்கள் ஒன்றுமே இல்லாத கொலசிப் (5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை) போன்றவற்றிற்கு விலை கொடுப்பவர்களாக உள்ளமை ஆகும். முன்பு மாணவர்கள் பாடசாலையில் நாயன்மார்களது குருபூசை தினங்களினை கொண்டாடுவார்கள் ஆனால் இன்று வெகுஜன ஊடகங்களில் சினிமா கதாநாயகர்களின் தினங்கள் கொண்டாடப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X