2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் புறாத் தீவு

Subashini   / 2018 மே 08 , பி.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக நிலாவெளி கடற்கரை மற்றும் புறாத்தீவு என்பன அமைகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் திருகோணமலை மாவட்டத்தில், பல உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையைக் கொண்ட, அழகிய, பிரதேசமான இங்கு, இயற்கையாய் அமைந்த ஒரு பிரதேசமாக நிலாவெளி கடற்கரை மற்றும் புறாமலை காணப்படுகிறது. திருகோணமலை நகரில் இருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் இது அமையப்பெற்றுள்ளது. 

கிழக்கு இலங்கையின் இயற்கை எழில் கொஞ்சும் இங்கு, படகுப் பயணம், சூரியக் குளியல், நீச்சல் போன்றவற்றுக்கு சிறந்த இடமாக அமைகின்றதாலோ என்னவோ, சுற்றுலாப்பயணிகளின் வருகை இங்கு கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது.

திருகோணமலையில் இருந்து வடமேற்கில் அமைந்துள்ள கரையோரப் பிரதேசமான நிலாவெளி கடலில், மீன்பிடித்தொழில் பிரதான பங்கு வகிக்கின்றது.

மேலும், மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இங்கு, நட்சத்திர சுற்றுலா விடுதிகள் பல காணப்படுகின்றதால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் மிகமுக்கிய தெரிவாக இது காணப்படுகின்றது.

நிலாவெளிக் கடற்கரையில் இருந்து, சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது புறாதீவு. அந்தவகைய அழகிய நிலாவெளிக் கடற்கரையை இன்னும் அழகூட்டும் வகையிலான புறாதீவு, குழந்தைகளுடன் சென்று பார்க்கவேண்டிய மிகமுக்கிய இடமாகும்.

புறாத்தீவில் பெரிய புறாத்தீவு, சிறிய புறாத்தீவு என இரண்டு தீவுகள் உள்ளன. பெரிய புறாத்தீவு கரையில் பவளப் பாறைகளைக் கொண்டுள்ளது. சிறிய புறாத்தீவு, பாறை திட்டுக்களினால் சூழப்பட்டுக் காணப்படுகின்றது. பெரிய புறாத்தீவு 200 மீற்றர் நீளமும், 100 மீற்றர் அகலமும் கொண்ட பெரிய தீவாகும்.    

மேலும், இலங்கையின் உலர் வலயத்தில் காணப்படும் இத் தேசிய பூங்காவின் வருடாந்த வெப்பநிலை 27.0 °C (80.6 °F) ஆகும். இப்பொழுது இந்த இடத்தை, தேசிய விலங்கு சரணாலயமாக மாற்றியுள்ளார்கள். படகு போக்குவரத்து நடத்தப்படும் இந்த அழகிய இடம், மலையைச் சுற்றி ஆழம் குறைந்த கடல், அழகிய முருகை கற்களோடு காட்சி தருகிறது.

ஆரம்ப காலங்களில் இத்தீவுக்கு, புறாக்களின் வருகை அதிகமாக இருந்ததால், இத்தீவுக்கு புறாத்தீவு எனப் பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். மேலும், இங்கு 100 வகையான பவளப் பாறைகளும், முன்னூறு வகையான பவள பாறை மீன்களும் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

இங்கு, காணப்படும் சிறு சிறு வர்ணக் கற்கள், சூரிய ஒளியில் தெறிக்கும் அழகு, நீரினினுள் கடல் வாழ் மீன்கள், உயிரினங்கள் நீந்திச் செல்லும் அழகு போன்றன மனதை கொள்ளை கொள்ளும் பேரழகாகும்.

இதேவேளை, இலங்கையிலுள்ள சிறந்த பவளப் பாறைகள் சிலவற்றைக் கொண்டுள்ள புறாத்தீவு தேசியப் பூங்கா, இலங்கையிலுள்ள இரு கடல்சார் தேசியப் பூங்காக்களில் ஒன்றாகும். இது 2003இல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், இலங்கையின் 17ஆவது தேசியப் பூங்காவான இது, பிரித்தானிய ஆட்சியின் போது, சுடு பயிற்சித் தளமாகப் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் வருடாந்த மழைவீழ்ச்சி 1,000–1,700 மில்லிமீற்றர்கள் (39–67 in)க்கு இடைப்பட்டதாகும். இது ஒக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் அதிக மழையைப் ​பெறுகின்றது. இப் புறாத்தீவை, நிலாவெளி கடற்கரையில் இருந்து கடல் மார்க்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் பார்க்க முடியும்.

இதேவேளை, புறாத் தீவில் உள்ள கடல் நீரானது, கண்ணாடி போன்று தெளிவாக காட்சியளிப்பதுடன் சுழியோடும் அளவுக்கு அங்கு பாதுகாப்பான ஏற்பாடுகளும் அமையப்பெற்றுள்ளன. இதனை, வனஜீவராசிகள் திணைக்களத்தின் பாதுகாப்புகள் உட்பட இலங்கை கடற்படையும் பாதுகாத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

மேலும், புறாத் தீவில் உள்ள ஏதாவது பொருட்களையோ கடற்பாசி சிற்பிகளையோ கடல் தாவர இனங்களையோ தம்வசம் வைத்துக்கொள்ளவோ, அங்கிருந்து கொண்டுவர​​வோ முடியாது. மீறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இயற்கையை முழுமையாக அனுபவிக்கவும் விடுமுறையை அழகாக மாற்றவும் மிகச்சிறந்த தெரிவான நிலாத்தீவு கடற்கரை மற்றும் புறாத்தீவு இலங்கையில் பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய மிகமுக்கிய இடம்​ என்றால் அது மிகையாகாது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .